கர்நாடகாவில், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியை அனுபவிக்கும் முன்பே மாணவி ஒருவர் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடகாவில் வியாழக்கிழமை எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெளியானது. குடகு மாவட்டம், சோம்வார்பேட்டையில் உள்ள சுர்லாபி கிராமத்தை சேர்ந்த 14வயது மீனா எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தேர்ச்சி பெற்றார். இதையடுத்து பெற்றோர் சுப்ரமணி- முத்தாக்கி ஆகியோருடன் பள்ளி சென்ற மாணவி மீனாவை ஆசிரியர் பாராட்டி பரிசும் வழங்கி உள்ளார்.
இந்த மகிழ்ச்சியுடன் வீடு திரும்பிய நிலையில், திடீரென்று வீட்டின் உள்ளே புகுந்த ஓம்காரப்பா (30) என்னும் இளைஞர் மீனாவை பெற்றோர் கண் எதிரே இழுத்துச் சென்றிருக்கிறார்.
அதோடு தான் எடுத்து வந்த அரிவாளால் தலையை துண்டித்தும் இருக்கிறார். ரத்த வெள்ளத்தில் மகள் உயிரிழந்ததைப் பார்த்து பெற்றோர் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
ஓம்காரப்பா அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில், அக்கம்பக்கத்தினர் தகவலின் பேரில், சோம்வார்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். இந்தப் படுகொலை தொடர்பாக குடகு கூடுதல் எஸ்.பி.சுந்தர்ராஜ் விசாரணை மேற்கொண்டார்.
அப்போது மீனாவுக்கும், ஓம்காரப்பாவுக்கும் நடக்க இருந்த திருமண நிச்சயதார்த்தம் நின்றதால் இந்த படுகொலை அரங்கேறியது தெரியவந்தது.
இதையும் படிங்க: அம்மாகிட்டயா சொன்ன… தனியாக இருந்த பெண்ணைக் கொன்ற மூவர் கைது
வியாழக்கிழமை 14வயது மீனாவுக்கும், 30 வயது ஓம்காரப்பாவுக்கும் திருமண நிச்சயம் செய்ய ஏற்பாடு நடந்துள்ளது. அப்போது மைனர் பெண்ணுக்கு திருமணம் நிச்சயம் நடப்பது குறித்து தகவல் அறிந்த சமூகநலத்துறை அதிகாரிகள் மீனா வீட்டுக்கு வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது 18வயது நிறைவடைந்தபிறகே திருமணம் செய்து வைக்க வேண்டும் கூறினர். மீனாவின் பெற்றோரும் அதை ஏற்றுக் கொண்டனர். அதே போல் ஓம்காரப்பாவின் பெற்றோரையும் அதிகாரிகள் எச்சரித்து சென்றுள்ளனர்.
இதனால் திருமண நிச்சயதார்த்தம் நின்று போன ஆத்திரத்தில் இருந்த ஓம்காரப்பா, மீனாவை வீடுபுகுந்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார், தலைமறைவான ஓம்காரப்பாவை தேடி வருகின்றனர்.