கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம், தமிழ்நாடு பாஜக புகார் மனு அளித்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில், கள்ளச் சாராயம் அருந்தியவர்களில் தற்போது வரை 58 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த ஒருவார காலமாக 100 -க்கும் மேற்பட்டவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை, சேலம் மற்றும் விழுப்புரம் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக முக்கிய குற்றவாளிகள் சின்னக்கண்ணு , ஜோசப் ராஜா , சின்னத்துரைஉள்ளிட்ட 7 பேரை கைது செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இப்படிபட்ட சூழலில் , எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை முன்வைத்து வருகின்றனர். மறுபுறம், விஷச்சாராய உயிரிழப்பை பாஜக ,அதிமுக காட்சிகள் அரசியலாக்க முயற்சி செய்வதாக ஆளும் திமுக அரசு குற்றம்சாட்டியுள்ளது.
இந்த நிலையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம், தமிழ்நாடு பாஜக புகார் மனு அளித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,” தமிழகம் முழுவதும் கடந்த மூன்று ஆண்டுகளில் பெருகியிருக்கும் கஞ்சா, கள்ளச்சாராயம் உள்ளிட்ட போதைப்பொருள்கள் புழக்கத்தை, திமுக அரசு கண்டும் காணாமல் இருப்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
திமுக அரசின் இந்த அஜாக்கிரதையால், கள்ளக்குறிச்சியில் 60 உயிர்களை, கள்ளச்சாராயத்துக்குப் பறிகொடுத்துள்ளோம். கள்ளச்சாராய விற்பனையின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பது குறித்து சிபிஐ விசாரணை கோரி,
இன்றைய தினம், @BJP4TamilNaduமூத்த தலைவர்களுடன் இணைந்து, நமது மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு R.N. ரவி அவர்களைச் சந்தித்தோம்.
மேலும், இத்தனை உயிர்கள் பலியான பின்னரும், இதற்குப் பொறுப்பான மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் அமைச்சர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் முதலமைச்சர் திரு ஸ்டாலின் இருப்பதும்,
பொதுமக்களிடையே பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. உடனடியாக, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சரைப் பதவி நீக்கம் செய்ய முதலமைச்சரை வலியுறுத்த வேண்டும் என்றும், மாண்புமிகு ஆளுநரைக் கேட்டுக் கொண்டோம் என்று குறிப்பிட்டுள்ளார்.