கொரோனா(covid) தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் நோயாளிகள், முதியவர்கள், கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும் என்று பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று வைரஸ் கடந்த ஓராண்டாக கட்டுக்குள் இருந்து வந்த நிலையில், அண்டை மாநிலமான கேரளாவில் தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அங்கு பரவி வரும் வைரஸ் ஜே.என்.1 எனப்படும் புதிய உருமாற்றம் வைரஸ் என கூறப்படுகிறது.
இதையடுத்து தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் நோய்த் தடுப்புப் பணிகளும் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக மாவட்ட துணை சுகாதாரஇயக்குநர்களுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
இதுதொடர்பான பொது சுகாதாரத்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்…
இந்தோனேசியா, தாய்லாந்து, கேரளாவில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து மத்திய சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் காணொலி முறையில் அனைத்து மாநில அரசுகளுடனும் விவாதித்தார்.
கரோனா பரவலைக் கண்காணிக்கவும், பரிசோதனைகள் மற்றும் மருத்துவக் கட்டமைப்பை உறுதிபடுத்தவும் அவர் அறிவுறுத்தினார். அதன்படி, மாவட்ட துணை சுகாதார இயக்குநர்களுக்கு சில முக்கிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகிறது.
அறிகுறிகள் உள்ள அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். கை கழுவுதல், தனி நபர் இடைவெளி போன்ற கரோனா தடுப்பு முறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
இணை நோயாளிகள், கர்ப்பிணிகள், எதிர்ப்பாற்றல் குறைந்தவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும். பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.