நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி ஒன்றிய அரசை வலியுறுத்தும் வகையில் சட்டமன்றங்களில் தீர்மானம் நிறைவேற்றிடக்கோரி” 8 மாநில முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அதில் மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு முறையை தமிழ்நாடு தொடர்ந்து எதிர்த்து வருவதை தாங்கள் அறிவீர்கள் என்றும், தேசிய தேர்வு முகமை நடத்திய நீட் தேர்வில் ஏற்பட்ட பல்வேறு முறைகேடுகள் குறித்த சமீபத்திய செய்திகள் நாட்டில் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்காக கடினமாக உழைக்கும் மாணவர்களின் கனவுகளை சிதைத்துள்ளதாகவும்,
இதையும் படிங்க: நீட் விலக்கு – தமிழ்நாடு சட்டமன்றத்தில் தனித்தீர்மானம்! அடுத்து என்ன ?
கிராமப்புற ஏழை எளிய இளைஞர்கள் மருத்துவம் பயிலவேண்டும் என்ற கனவையும் இந்தத் தேர்வுமுறை தடுக்கிறது என்றும் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர் அவர்கள், நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நகலை எதிர்கட்சித் தலைவரின் பார்வைக்காக இத்துடன் இணைத்துள்ளதாகத் தெரிவித்துள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டின் இந்தக் கோரிக்கை
குறித்து நாடாளுமன்றத்தில் தாங்கள் குரல் எழுப்பவேண்டும் என்றும்,
இந்தியா கூட்டணியில் உள்ள மாநிலங்கள், மாணவர்களின் நலன் கருதி, தமிழ்நாட்டைப் போன்று அந்தந்த மாநில சட்டமன்றங்களில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.