சவுக்கு சங்கர் ஜாமீன் மனு விசாரணை மே 20-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
தமிழக அரசுக்கு எதிராகவும், திமுகவின் அதிகார மையங்கள் குறித்தும் தொடர்ச்சியாக யூடியூப் சேனல்களில் விமர்சனம் செய்து வந்தவர் யூடியூபர் சவுக்கு சங்கர்.
சமீபத்தில் ரெட்பிக்ஸ் யூடியூப் சேனலுக்கு சவுக்கு சங்கர் அளித்த நேர்காணலில், பெண் போலீசார் குறித்தும்,காவல்துறை அதிகாரிகள் தொடர்பாகவும் அவதூறு கருத்தை பரப்பியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக கோவை சைபர் கிரைம் காவல் உதவி ஆய்வாளர் சுகன்யா, சைபர் க்ரைம் பிரிவில் புகார் அளித்தார்.இதன் பேரில் அவதூறு பரப்புதல், பணிபுரிய விடாமல் தடுத்தல், அனுமதியின்றி தவறான கருத்துகளை வெளியிடுதல்,தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளில், சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதையும் படிங்க: விடாது துரத்தும் அரசு….சவுக்கு சங்கர் வீட்டுக்கு சீல்…யூடியூப் நிர்வாகிக்கும் காப்பு
இதையடுத்து, போலீசார், தேனியில் விடுதி ஒன்றில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கைது செய்து அழைத்து வந்து கோவை சிறையில் அடைத்தனர்.மேலும் அடுத்தடுத்து வந்த புகாரின்பேரில் தேனி,திருச்சி, சென்னை போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில், நீதிமன்ற உத்தரவின்படி மாநகர சைபர் கிரைம் போலீஸார், சவுக்கு சங்கரிடம் ஒருநாள் விசாரணை நடத்தி முடித்தனர். பின்னர் சவுக்கு சங்கரை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் 4-ல் நேற்று மாலை ஆஜர்படுத்தினர்.
இதையடுத்து, மீண்டும் அவர் கோவை சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் சவுக்கு சங்கர் ஜாமீன் மனு மீதான விசாரணை நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணையை மே 20-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி சரவணபாபு உத்தரவிட்டார்.