விழுப்புரம் மரக்காண கள்ளச்சாராயம் விவகாரம் நீடித்து வரும் நிலையில் தஞ்சாவூரில் மது அருந்தி இரண்டு பேர் உயிரிழந்த சம்பவத்தில், உடற்கூராய்வு செய்யப்பட்டதில் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கீழவாசல் பகுதியில் மீன் சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் டாஸ்மாக் மதுக்கடை மீன் சந்தை அருகே செயல்பட்டு வருவதால் பாரில் காலை 6 மணி முதலே சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று காலை 11 மணி அளவில், மது வாங்கிக் குடித்த 60 வயதான குப்புசாமி என்பவர், சிறிது நேரத்தில் வலிப்பு வந்து உயிரிழந்தார்.இதனையடுத்து அதே கள்ள சந்தையில் மீன் வியாபாரம் செய்து வரும் 36 வயதான விவேக் மது வாங்கி குடித்த சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார்.
இதனை கண்ட அப்பகுதி உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விவேக், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் சட்டவிரோதமாக மது விற்ற பார் மற்றும் டாஸ்மாக் கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் பார் உரிமையாளர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் டாஸ்மாக் கடையில் மது அருந்திய இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தினர். இதில் உயிரிழந்த குப்புசாமி மற்றும் விவேக் ஆகிய 2 பேரின் பிரேத பரிசோதனை ஆய்வு முடிவுகள் வெளிவந்தது.
அதில் உயிரிழந்த இருவரின் உடல் உடற்கூராய்வு செய்யப்பட்ட நிலையில், அவர்கள் குடித்த மதுவில் சயனைடு கலந்திருந்தது தெரியவந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.