
காதல் கணவன் பிரவீன் ஆணவப் படுகொலையான நிலையில், தற்கொலைக்கு முயன்ற ஷர்மிளாவின் மரணம் தற்கொலை அல்ல, கொலை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தெரிவித்துள்ளது.
ஆணவப்படுகொலைக்கு எதிராக தனிச்சட்டத்தை இயற்ற வேண்டும் என்றும் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தி உள்ளார்.இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு; –
சாதி எனும் மனநோய் இன்னும் எத்தனை அப்பாவி உயிர்களைப் பறிக்குமோ என்று திகைத்து கலங்கச் செய்கிறது ஷர்மிளாவின் மரணச் செய்தி. நிறைவான பெருவாழ்வு வாழ்ந்திருக்க வேண்டிய ஒரு இளம்தம்பதியை இந்தச் சாதியச் சமூகம் எப்படி ஈவு, இரக்கமின்றி கொண்டு போடும் என்பதற்கு பிரவீன் – ஷர்மிளா தம்பதிக்கு நிகழ்ந்த கொடுமைதான் சான்று.
இது தற்கொலை அல்ல. நமது சமூகக் கட்டமைப்பால் நிகழ்ந்த அப்பட்டமான கொலை. சாதிவெறியும், சாதிவெறியர்களுக்கு ஆதரவான நமது நமூக அமைப்பும்தான் சகோதரி ஷர்மிளாவைக் கொன்றிருக்கிறது.

சாதிவெறி பிடித்த கொலையாளிகள் எந்த பாதிப்புமின்றி பத்திரமாக பவனி வரும்போது, எந்தத் தவறும் செய்யாத அப்பாவி ஷர்மிளா ஏன் சாக வேண்டும்? இது என்ன நியாயம்?
சாதிவெறிதான் இருப்பதிலேயே மிக மோசமான மனநோய். அந்த மனப்பிறழ்வின் உச்சக்கட்ட வெளிப்பாடுதான் ஆணவப் படுகொலை, இது தனிமனிதர்களுக்கு எதிராக நடத்தப்படும் குற்றம் அல்ல. ஒட்டுமொத்த சமூகத்தின் மீதும், அதன் அடிப்படை சமத்துவ விழுமியங்கள் மீதும் தொகுக்கப்படும் தாக்குதலாகும்.
குற்றங்களிலேயே மிகவும் மோசமான குற்றமான சாதி ஆணவப் படுகொலைவழக்குகளில் காவல்துறை எந்தவித பாரபட்சமுமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்க இன்னும் எத்தனை பிரவீன்களும், ஷர்மிளாக்களும் சாக வேண்டும்?
ஒரு பெண்ணுக்கு தனது துணையைத் தேர்ந்தெடுப்பதற்கான உரிமையை இயற்கையும், இந்திய அரசியலமைப்புச் சட்டமும் வழங்குகிறது.
ஆனால், பல நூற்றாண்டுகளாக சாதி மத வெறியர்கள் தொடர்ந்து காதல், திருமணம் உள்ளிட்ட பெண்களின் தனிப்பட்ட உரிமைகளில் தங்களின் ஆதிக்கத்தை திணிப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள்.
ஆகவே பெண்களுக்கு எதிரான இந்த ஆதிக்கங்களை உடைத்தெறிவதே தந்தை பெரியார், புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் வழிவந்த முற்போக்கு இயக்கங்களின் தலையாய கடமையாகும்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நீண்டகால கோரிக்கையின்படி ஆணவப் படுகொலைக்கு எதிரான தனிச்சட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக இயற்ற வேண்டும்.
அச்சட்டத்தின்படி ஆணவப் படுகொலை வழக்குகளை உரிய காலத்திற்குள் விரைந்து முடித்து, இக்குற்றத்தில் ஈடுபடும் சாதி வெறியர்களுக்கு உச்சபச்சமாக மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும்.
அதுவரை ஆணவப் படுகொலை வழக்கில் ஈடுபடும் குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டும்.
இதையும் படிங்க: பிரதமர் மோடி தனது இஸ்லாமிய வெறுப்பை கக்கி உள்ளார் – வைகோ!
இந்த உலகில் வாழவே தகுதியற்றவர்கள் என்றால் அது தங்களின் ஆதிக்க மனநோயால் பிறர் உயிரைப் பறிக்கும் அளவுக்குச் செல்லும் சாதி மத வெறியர்கள்தான். அந்த மனிதகுல விரோதிகள்தான் சாக வேண்டியவர்கள்.
சகோதரி ஷர்மிளாவின் மரணம் தற்கொலை அல்ல. இது ஒரு கொலை. பிரவீனுக்கு நிகழ்ந்தக் கொலையைவிட மிக மோசமான கொலை.
இவ்வாறு தனது அறிக்கையில் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: வீட்டை விட்டு வெளியே வந்துடாதீங்க.. –