மனிதனின் அறிவைக் கூர் தீட்டும் கருவி எது தெரியுமா? அதுதான் புத்தகம். புத்தகத்தின் ஒவ்வொரு பக்கமும் புரட்டப்படும்போதும் நமது வாழ்க்கைப் பாதை நிச்சயம் மாற்றப்படுகிறது.
ஒரு புத்தகம் என்பது ஆயிரம் நண்பர்களின் நல்லுரைகளைக் கேட்பதற்குச் சமமாகிறது. அறிவுக் கூர் தீட்டப்படும்போது நீ காணும் காட்சிகளின் உண்மைத் தன்மை விளங்கும்.
வெறும் எழுத்துக்களால் கட்டமைக்கப்பட்ட காகிதம் அல்ல புத்தகம். அவை தலைவிதியையே மாற்றும் வல்லமை கொண்டவை. மனம் சோர்ந்து கிடக்கிறதா? வாழ்வைக் குறித்த பயமா?
புத்தகத்தை எடுத்து படித்துப் பார்… அது உன் சோம்பலைப் போக்கி சுறுசுறுப்பைத் தரும். மூளை புத்துணர்வு பெறும். உன் வாழ்க்கைப் பாதையினை வெளிச்சம் காட்டும்.
துப்பாக்கியிலிருந்து வெளியேறும் தோட்டாவைவிட வீரியமான ஆயுதம் புத்தகம் என்பது மார்ட்டின் லூதர் கிங்கின் பொன்மொழி.
தனிமனிதனை மட்டுமல்ல சமுதாயத்தையே புரட்டிப் போடும் புத்தகங்களை பாதுகாக்கும் நோக்கிலும், இன்னும் இன்னும் புதிய புத்தகங்கள் படைக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும், யுனெஸ்கோ நிறுவனம் ஆண்டுதோறும் ஏப்ரல் 23ஆம்நாளை உலகப் புத்தக தினமாகக் கொண்டாடி வருகிறது.
உலகப் புகழ் பெற்ற இலக்கியவாதிகளான டி செர்வாண்டஸ், வில்லியம் ஷேக்ஸ்பியர் மற்றும் இன்கா கார்சிலாசோ ஆகியோரின் மறைவு நாளான ஏப்ரல் 23ஆம் தேதி, டி லா வேகா ஆகியோரின் புகழுக்கு பெருமை சேர்க்கும் விதமாக புத்தக தினம் அனுசரிக்கப்படுகிறது.
இது புத்தக தினமாக மட்டுமில்லாமல், புத்தக உரிமைக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில், ரஷ்யப் படைப்பாளிகளின் கோரிக்கையை ஏற்று புத்தக உரிமை தினமாகவும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த நாளில் புத்தக வாசிப்பை அதிகரிக்கும் வகையிலான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
உலகபுத்தக தினத்தில் புத்தகம் குறித்து முக்கிய ஆளுமைகள் கூறிய சில பொன்மொழிகளைப் பார்ப்போம்…
நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன்.
-ஆபிரகாம் லிங்கன்
ஆயிரம் புத்தகங்களை வாசித்தவன் ஒருவன் இருந்தால் அவனைக் காட்டுங்கள்; அவனே எனது வழிகாட்டி!
– ஜூலியஸ் சீசர்
உலக வரைபடத்திலுள்ள மூலைமுடுக்குகளுக்கெல்லாம் போக விரும்புகிறாயா, ஒரு நூலகத்துக்குச் செல்..
– டெஸ்கார்டஸ்
போதும் என்று நொந்துபோய், புதுவாழ்வைத் தேடுகிறீர்களா… ஒரு புதிய புத்தகத்தை வாங்கி வாசிக்கத் தொடங்கு…
– இங்கர்சால்
சில புத்தகங்களை சுவைப்போம்… சிலவற்றை அப்படியே விழுங்குவோம்… சில புத்தகங்களை மென்று ஜீரணிப்போம்!
– பிரான்சிஸ் பேக்கன்
புரட்சிப் பாதையில் கைத்துப்பாக்கிகளைவிட பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே!
– லெனின்
உண்மையான வாசகன், வாசிப்பதை முடிப்பதே இல்லை!
– ஆஸ்கார் வைல்ட்
உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ அதுபோல மனதுக்குப் பயிற்சி புத்தக வாசிப்பு!
– சிக்மண்ட் ஃப்ராய்ட்
பழங்காலத்திய மகா புருஷர்களை நேரில் தரிசித்து, அவர்களுடன் உரையாட வேண்டுமா? நூலகத்துக்குப் போ…
– மாசேதுங்
புத்தகம் குறித்த சில பொன்மொழிகளைப் பார்ப்போம்…
- உண்மையான வாசகன் வாசிப்பதை நிறுத்துவது கிடையாது.!
- மிக நல்ல புத்தகங்களை கிடைத்த உடனே படித்து விடு.. இல்லையேல் அவற்றைப் படிக்க உனக்கு வாய்ப்பு கிடைக்காமலே போய்விடும்.
- புத்தகம் இல்லாத வீடு ஆன்மா இல்லாத கூடு.
- மற்றவர்களுக்கு கொடுக்கும் பரிசில்களில் மிகச் சிறந்த பரிசு புத்தகங்கள் தான்.
- புத்தகங்களைச் சேமியுங்கள் அலமாரியில் அல்ல; உங்களின் மூளையில்..
- உலகின் விலை மதிக்க முடியாத பொக்கிஷம் சிறந்த புத்தகங்களே
- சிலவற்றை படிக்க வேண்டும்.. சிலதை அசைபோட வேண்டும்.. சிலவற்றை ஜீரணிக்க வேண்டும்.
- புத்தகத்தின் மேலட்டையை பார்த்து அவற்றை மதிப்பிடாதே.
- புத்தகத்தை படிப்பது.. சிந்திப்பது.. அதற்காக நேரத்தை திட்டமிடுவது என்று தொடர்ந்து முதலீடு செய்ய தயாராக இருங்கள்.
- புத்தகம் இல்லாத வீடு என்பது ஜன்னல்கள் இல்லாத அறை.
- புத்தகங்கள் உலகின் தலை சிறந்த நண்பன்.
- பேராசை கொள்ளுங்கள்… புத்தகங்களை வாசிப்பதில்.
- எழுத்தாளர்கள் மரணிக்கலாம்… அவர்களின் எழுத்துக்கள் மரணிப்பதில்லை… அவை புத்தகமாக தொடர்கின்றன
- புத்தகத்தின் ஒரு பக்கம் திறக்கப்படும்போது, ஒரு சிறைச்சாலையின் கதவு மூடப்படுகிறது.
- ஆயிரம் புத்தகங்களை வாசித்த ஒருவன் இருந்தால்.. அவனே சிறந்த வாழ்க்கை வழிகாட்டி.
- புத்தகங்களோடு வாழ்பவனுக்கு எப்போதும் வசந்தகாலம் தான்.
- உலகில் சாகாவரம் பெற்ற பொருள்களில் முதலிடம் புத்தகத்துக்கே
‘புனிதமுற்று மக்கள் புதுவாழ்வு வேண்டின்; புத்தகசாலை வேண்டும் நாட்டில் யாண்டும்’ என்பார் பாரதிதாசன். நாட்டில் மட்டுமல்ல ஒவ்வொரு வீட்டிலும் ஒரு புத்தகசாலை அமைப்பது அவசியம். புத்தக வாசிப்பு என்பது ஓடும் நதியைப்போன்றது. ஒரு புத்தகம் இன்னொரு புத்தகத்துக்கு நம்மை அழைத்துச் செல்லும். அப்படிப்பட்ட புத்தக நதியில் மூழ்கி புத்தம் புதிய சுகானுபவங்களைப் பெற நீங்களும் தயார்தானே!