தமிழ்நாட்டில் அரசு பேருந்துகளில் கட்டண உயர்வு என்பது தற்போது கிடையாது என தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த சிவசங்கர் கூறியதாவது :
அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் புதிதாக வாங்கப்பட்ட பேருந்துகளில் செல்போன் சார்ஜ் வசதி, படுக்கை வசதி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 600க்கும் மேற்பட்டோர் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
இலவச பயணங்களுக்காக போக்குவரத்து துறைக்கு தமிழகம் முதல்வர் நிதி ஒதுக்கி வருகிறார். அரசு போக்குவரத்து கழகத்திற்கு நடப்பாண்டு ரூபாய் 2500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அரசு பேருந்துகளில் கட்டண உயர்வு என்பது தற்போது கிடையாது. மற்ற மாநிலங்களில் டீசல் பெட்ரோல் விலை உயரும் போதெல்லாம் பேருந்து கட்டணம் உயர்த்தப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் அப்படி உயர்த்தாமல் போக்குவரத்து கழகத்தில் நடத்துமாறு முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.