சென்னை தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகம் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது..
“சென்னை தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின், தலைமை அலுவலகம் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தி உள்ள சம்பவத்திற்கு எனது கடும் கண்டனங்கள்.
இந்த விடியா திமுக ஆட்சியில் தனிநபர் தொடங்கி, ஆளுநர் மாளிகை, அரசியல் கட்சி இயக்கங்கள் , அதுவும் திமுகவின் பிரதான கூட்டணி கட்சியாக அங்கம் வகிக்கும் இந்திய கம்யுனிஸ்ட்கட்சி வரை எங்குமே யாருக்குமே பாதுகாப்பில்லாத அவல நிலை நீடிப்பதை தினம்தினம் ஒரு சம்பவம் நிரூபிக்கிறது.
நான் ஏற்கனவே பலமுறை குறிப்பிட்டது போல இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு தொடர்ந்து கேள்வி குறியாகவே இருக்கிறது ,
தங்களது கூட்டணி கட்சியின் அலுவலகத்தின் மீது தாக்குதலுக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்து , கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.