“கோயில்களில் தரிசனம் செய்ய தடை இல்லை” – அமைச்சர் சேகர் பாபு

புத்தாண்டையொட்டி இன்று நள்ளிரவு 12 மணிக்கு கோயில்களில் தரிசனம் செய்யத் தடையில்லை என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அதேபோல் உருமாறிய கொரோனா வைரசான ஒமிக்ரான் தொற்றால் இதுவரை 46 பேர் தமிழகத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனை அடுத்து தமிழகம் உள்ளிட்ட இந்தியாவில் பல்வேறு மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த சூழலில் நாளை புத்தாண்டு தினம் கொண்டாடப்பட உள்ளதால் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழகத்தில் கடற்கரைகளில் டிசம்பர் 31-ஆம் தேதி இரவு பொதுமக்கள் கூடி புத்தாண்டு கொண்டாட காவல்துறை தடை விதித்துள்ளது.

இந்நிலையில் காஞ்சிபுரத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் ஆய்வு செய்த அமைச்சர் சேகர்பாபு, பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, புத்தாண்டு நள்ளிரவு கோயில்கள் திறந்திருக்கும்போது மக்கள் முகக்கவசம் அணிந்தும், தனிமனித இடைவெளியைப் பின்பற்றியும் தரிசனம் செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் முழுமையான ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் சேகர்பாபு அறிவுறுத்தினார். ஆன்மிகவாதிகள் மகிழ்ச்சியுடனும் மலர்ச்சியுடன் இருப்பதற்கு திராவிட அரசு என்றென்றும் துணை இருக்கும் என்று சேகர்பாபு குறிப்பிட்டார்.

Total
0
Shares
Related Posts