வடகிழக்கு பருவமழையின்போது தமிழ்நாட்டில் ஒரு உயிரிழப்பு கூட ஏற்படக்கூடாது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வழக்கமாக அக்டோபர் மாதம் முதல் தொடங்கும். எனபதால் பருவமழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்து துறை செயலாளர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், கே.கே.ஆர்.ஆர். ராமச்சந்திரன், எ.வ.வேலு, சேகர்பாபு, மா.சுப்பிரமணியம், தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது :
முன்னெச்சரிக்கை என்பது இருந்தால் எந்த பாதிப்பையும் தடுத்துவிடலாம். காலநிலை மாற்றத்தால் வடகிழக்கு பருவமழை சில நாட்களிலேயே மொத்தமாக பெய்துவிடுகிறது.
வானிலை தரவுகளை உடனுக்குடன் வழங்க தரம் உயர்த்தப்பட்ட செயல்பாட்டு மையம் திறக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 1,400 தானியங்கி மழைமானி, 100 தானியங்கி வானிலை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
Also Read : தவெக கொடி விவகாரத்தில் தலையிட முடியாது – இந்திய தேர்தல் ஆணையம்..!!
கடந்த காலங்களில் சென்னை, நெல்லை, தூத்துக்குடியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தமிழ்நாடு அரசின் துரித நடவடிக்கையால் 3 மாவட்டங்களில் விரைவாக இயல்புநிலை திரும்பியது.
வடகிழக்கு பருவமழையின்போது ஒரு உயிரிழப்பு கூட ஏற்படாத வகையில் அனைவரும் செயல்பட வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் நடந்துவரும் மழைநீர் வடிகால் பணிகள் எந்த அளவுக்கு உள்ளது? அதை விரைந்து முடிக்க வேண்டும்.
பருவமழையால் ஏற்படும் சேதங்களை கையாள தேவையான உபகரணங்களை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும்.
மரம் விழுந்தால் அதை வெட்டி அப்புறப்படுத்துவதற்கான எந்திரங்கள், மீட்பு பணிகளுக்கான படகுகள், ஜே.சி.பி. எந்திரங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஒவ்வொரு மாவட்டத்திலும் தேவையான அளவு கையிருப்பில் வைத்திருக்க வேண்டும் என் தெரிவித்தார்.