ஒருவர் பலி… இந்தியாவில் உச்சத்தில் ஒமைக்ரான்.. – சுகாதாரத்துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

நாடு முழுவதும் ஒமைக்ரான் பாதிப்பு 2,630 ஆக அதிகரித்துள்ளது.ஒரே நாளில் 495 பேருக்கு புதிதாக ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 995 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக ஒன்றிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேற்று ராஜ்தான் மாநிலத்தில் 73 வயதுடைய ஒருவர் ஒமைக்ரான் பாதிப்பால் உயிரிழந்தார்.

இதுவரை ஒமைக்ரான் பாதிப்பால் இந்தியாவில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் 797 பேர், தலைநகர் டெல்லியில் 465 பேர், ராஜஸ்தானில் 236 பேர், கேரளத்தில் 234 பேர், கர்நாடகாவில் 226 பேர், குஜராத்தில் 204 பேர், தமிழ்நாட்டில் 121 பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் தெலுங்கானாவில் 94 பேர், ஹரியானாவில் 71 பேர், ஓடிசாவில் 60 பேர், உ.பி.யில் 31 பேர், ஆந்திராவில் 28 பேர், மேற்கு வங்கத்தில் 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் மத்திய பிரதேசத்தில் 9 பேருக்கும், உத்தரகாண்டில் 8 பேருக்கும், கோவாவில் 5 பேருக்கும், மேகாலயாவில் 4 பேருக்கும், சண்டிகரில் 3 பேருக்கும், ஜம்முவில் 3 பேருக்கும், அந்தமானில் 2 பேருக்கும், அசாமில் 2 பேருக்கும், பாண்டிசேரியில் 2 பேருக்கும், பஞ்சாப்பில் 2 பேருக்கும், ஹிமாச்சல், லடாக், மணிப்பூரில் தலா ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 90,928 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியுள்ளது. 2,85,401 பேர் இந்தியா முழுவதும் கொரோனா தொற்றினால் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 19,206 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

புத்தாண்டிற்கு பிறகு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். தமிழகத்தில் இன்று முதல் இரவு ஊரடங்குடன் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகின்றன.

கர்நாடக மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு விதிக்கப்பட்டு இருந்தது. பீகார் மாநிலத்திலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் வார இறுதி ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பொதுமக்கள் யாரும் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்றும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Total
0
Shares
Related Posts