தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 2,722 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து காணப்படும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 19 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின் படி, நாட்டின் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 18,840 ஆக பதிவாகியுள்ளது.
இதன் மூலம் நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 36 லட்சத்து 4 ஆயிரத்து 394ஆக உயர்ந்துள்ளது. அதில் தமிழ்நாடு, கேரளா,மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பாதிப்பு எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 31,810 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 2,722 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த பாதிப்பு 34,96,321 பேராக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதித்து வீட்டுத் தனிமையில் இருப்பவர்களையும் சேர்த்து தற்போது 18,687 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று மட்டும் கொரோனா பாதிப்பு குணமடைந்து 2,413 பேர் வீடு திரும்பியுள்ளனர்.
அதிகபட்சமாக இன்று சென்னையில் மட்டும் 939 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, செங்கல்பட்டில் 474 பேருக்கும், கோயம்புத்தூரில் 131 பேருக்கும், திருவள்ளூரில் 191 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 87 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.