மேட்டூர் அணையிலிருந்து, மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாயில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடுவது பற்றி இன்று வரை எந்த அறிவிப்பும் இல்லை என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது..
“28.7.2024 அன்று மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. மேட்டூர் அணையிலிருந்து, மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாயில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடுவது பற்றி இன்று வரை எந்த அறிவிப்பும் இல்லை.
மேட்டூர் அணையிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாத இறுதியில் மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாயில் பாசனத்திற்கு 1,000 கன அடி வீதம் 137 நாட்களுக்கு சேலம், நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உள்ள சுமார் 45 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பயனடையும் வகையில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்படும்.
இதையும் படிங்க : தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதா? ‘வெள்ளை அறிக்கை’ கேட்கும் ஓபிஎஸ்!!
கடந்த ஆண்டு மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாததால், மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாயில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை.
இதனால், விவசாயம், குடிநீர் மற்றும் கால்நடைகள் போதிய தண்ணீர் இல்லாமல் கடும் பாதிப்புக்குள்ளாயின. போதிய தண்ணீர் இல்லாததால் கால்நடைகளுக்குத் தேவையான தீவனம் இல்லாத காரணத்தினால், விவசாயிகள் தங்களது கால்நடைகளை விற்கக்கூடிய அவலமும் ஏற்பட்டது.
தற்போது பருவமழை அதிக அளவு பெய்து காவிரியில் அதிக அளவு வெள்ள உபரி நீர் வருவதால், ஓரிரு நாட்களில் மேட்டூர் அணை நிரம்பிவிடும்.
மேட்டூர் அணை நிரம்பிய பிறகு திறக்கப்படும் உபரி நீர் வீணாக கடலில் கலக்கும் நிலை ஏற்படும். எனவே, மேட்டூர் அணையிலிருந்து, மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாயில் உடனடியாக பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடுமாறு தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.