நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இந்த கூட்டத்தில், அரசியலமைப்பின் 131வது திருத்த மசோதா, தொகுதி மறுவரையறை உள்ளிட்ட முக்கியமான மூன்று மசோதாக்களை மத்திய அரசு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது.
மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை பெற்றிருந்தாலும், அரசியலமைப்பு திருத்த மசோதாக்களை நிறைவேற்றுவதற்கு சிறப்பு பெரும்பான்மை அவசியமாகும்.
அதாவது, மொத்த உறுப்பினர்களில் குறைந்தது பாதி ஆதரவு அல்லது அவையில் உள்ள உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தேவைப்படும்.
இந்த நிலையில், மக்களவையில் தேவையான எண்ணிக்கையை எட்ட பாஜக தலைமையிலான கூட்டணிக்கு கூடுதல் ஆதரவு தேவைப்படுகிறது. மாநிலங்களவையிலும் இதே நிலைமை காணப்படுகிறது.
இதனால், மசோதாக்கள் நிறைவேற்றம் குறித்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது. எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தாலோ அல்லது எதிர்பாராத ஆதரவு அளித்தாலோ, அரசுக்கு சாதகமான நிலை உருவாகலாம் என கூறப்படுகிறது.
இந்நிலையில், தொகுதி மறுவரையறை தொடர்பாக தென் மாநிலங்களின் உரிமைகள் பாதிக்கப்படக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இதற்கு எதிராக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பை பதிவு செய்து, கருப்புக்கொடி போராட்டத்தையும் அறிவித்துள்ளார்.
மேலும், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்த மசோதாக்களுக்கு எதிராக வாக்களிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தொகுதி மறுவரையறை மூலம் மாநிலங்களின் பிரதிநிதித்துவ எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படும் என்பதால், அரசியல் சூழல் மேலும் தீவிரமடைந்துள்ளது.

