Site icon ITamilTv

I.N.D.I.A கூட்டணியை கண்டு பிரதமர் மோடி அஞ்சுகிறார் – தமிமுன் அன்சாரி!!

Spread the love

இந்தியா கூட்டணியை கண்டு பிரதமர் மோடி அஞ்சுகிறார் என மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி திருப்பூரில் பேட்டி அளித்துள்ளார்.

திருப்பூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமீமுன் அன்சாரி செய்தியாளர்களிடம் பேசுகையில்..

“இந்தியாவின் தலைசிறந்த தொழில்நகரமாகவும், பின்னலாடை துறையில் உலக அளவில் முக்கிய நகரமாகவும் உள்ளது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் இருந்து திருப்பூருக்கு வேலை தேடி வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பின்னலாடை உற்பத்திக்கு முக்கிய மூலப்பொருளான நூல்விலையை 3 மாதத்திற்கு ஒருமுறை நிர்ணயம் செய்வதற்கான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும்.

15 நாட்களுக்கு ஒருமுறை நூல்விலை உயர்ந்த தொழில் மிகவும் பாதிக்கும். இதேபோல் திருப்பூர் பனியன் தொழிலை பாதுகாக்கவும், லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்கவும் பின்னலாடை நிறுவனங்களுக்கு மின்கட்டணத்தில் 25 சதவீதம் மானியம் அரசு வழங்க வேண்டும். திருப்பூரில் உள்ள நொய்யல் ஆற்றை சீர்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்லடத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதில் தொடர்புடைய குற்றவாளிகளை அரசு உடனடியாக கைது செய்வதுடன், கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் தடுக்கும் வகையில் போதை மருந்து கலாச்சாரத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். டாஸ்மாக் கடைகளை படிப்படியாக மூடி, பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். எதிர்க்கட்சிகள் சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்தியா கூட்டணி என்ற பெயரை கண்டு இப்படி அஞ்சுவார்கள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

அதன் எதிரொலியாக நாட்டின் பெயரை பாரத் என்று மாற்றுவது ஏற்றுக் கொள்ளதல்ல. அப்படியானால் இந்தியா என்ற பெயரில் இருக்கக்கூடிய அனைத்தையும் பெயர்மாற்றம் செய்து விடுவார்களா? சரியான நேரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தியா கூட்டணியை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார். கியாஸ் சிலிண்டர் விலையை குறைத்ததே இந்தியா கூட்டணியை கண்டுதான்.

ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுப்போம் என்றும், கருப்புப் பணத்தை ஒழிப்போம் என்றும் கூறினார்கள். எதுவும் நடக்கவில்லை. வேலையில்லா திண்டாட்டம் பெருகி உள்ளது. சனாதனம் குறித்து இந்து மதத்தை சேர்ந்தவர்கள் விவாதிக்கலாம். சனாதனத்தை பற்றி பேசினால் ஆட்சியை கலைப்போம் என்று கூறுவது ஏற்க முடியாது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதில் நடைமுறை சாத்தியமில்லை.

இது ஒரு கேலிக்கூத்தான செயலாகும். எல்லா மாநிலங்களிலும் குற்றங்கள் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் நடைபெறும் குற்றங்களை மட்டும் ஒருசில மாநில கவர்னர்கள் விமர்ச்சிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது” எனக் கூறியுள்ளார்.

பேட்டியின்போது கட்சியின் மாநில செயலாளர் ஜாபர்அலி, இணை செயலாளர் அப்துல்கலாம், மாவட்ட செயலாளர் இக்பால், பொருளாளர் பாபு உள்பட பலர் உடனிருந்தனர்.


Spread the love
Exit mobile version