புதுச்சேரியில் ரோந்து பணிக்கு செல்லும் போலீசார் துப்பாக்கி எடுத்துச் செல்லலாம் என எஸ்.எஸ்.பி. லோகேஷ்வரன் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் திருச்சி நவல்பட்டு காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் ஆடு திருடும் கும்பலால் கொலை செய்யப்பட்டார். இந்நிலையில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, மறைந்த சிறப்பு எஸ்.ஐ பூமிநாதனின் வீட்டிற்கு சென்று அவரது உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டிஜிபி, ரோந்து பணிக்கு செல்லும் போது துப்பாக்கியுடன் செல்ல அறிவுறுத்தியுள்ளதாகவும், தேவைப்பட்டால் தற்காப்புக்காக துப்பாக்கியை பயன்படுத்தலாம் என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில் தமிழகத்தை போல் புதுச்சேரியிலும் ரோந்து பணிக்கு செல்லும் போலீசார் துப்பாக்கி எடுத்துச் செல்லலாம் என எஸ்.எஸ்.பி. லோகேஷ்வரன் கூறியுள்ளார். மேலும் இரவு ரோந்து பணிக்கு செல்லும் போலீசார் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் லோகேஷ்வரன் தெரிவித்துள்ளார்.