அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கொரோனா மூன்றாவது தடுப்பூசியான பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொண்டார்.
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது அந்நாட்டு மக்களுக்கு பூஸ்டர் டோஸ் எனப்படும் மூன்றாவது டோஸ் தடுப்பூசி செலுத்துப்படுகிறது.
இந்நிலையில் வெள்ளை மாளிகையில் சுகாதார அதிகாரிகளின் அறிவுரைப்படி ஜோ பைடன் பைஸர் நிறுவனத்தின் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
அதன்பின்னர் பேசிய ஜோ பைடன் கொரோனா வைரஸை வெல்லவும், உயிரை காப்பாற்றவும் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மேலும் நோய்த்தொற்றால் எளிதில் பாதிக்கக்கூடிய 65 வயதைக் கடந்தவர்களுக்கும், நோய் எதிர்ப்புத் தன்மை குறைவாக உள்ளவர்களுக்கும் மூன்றாவது டோஸ் தடுப்பூசி (பூஸ்டர்) போட அனுமதி வழங்கப்படுகிறது. இதன் மூலம் நாட்டின் பொது சுகாதாரத் தேவைகளுக்குச் சிறந்த சேவையை வழங்க முடியும் என அமெரிக்க நோய்த் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.