போக்குவரத்துத் துறையை தனியார் மயமாக்கல் என்பது முற்றிலும் கிடையாது; தனியார் ஒப்பந்த ஊழியர்களை நியமிப்பது தொடர்பாக வெளியான செய்தி முற்றிலும் வதந்தி என தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
கடலூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது :
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் துறையில் முற்றிலும் தனியார் மயமாக்கல் என்பது கிடையாது. தமிழ்நாடு அரசை குறை கூறவும் அரசியல் நோக்கத்திற்காகவும் சர்ச்சை எழுகிறது.
அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் கீழ் சில இடங்களில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களை ஒப்பந்த அடிப்படையில் எடுக்கிறோம். ஏன் என்றால், அதிமுக ஆட்சியில் சரியாக ஊதியம் வழங்காதது, ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு பணி நிறைவு பணப்பலன் கொடுக்காதது, ஓய்வு பெறும் வயதை 58ல் இருந்து 60ஆக உயர்த்தியது உள்ளிட்ட காரணங்களால் கடந்த மே மாதம் அதிகமானோர் ஓய்வு பெறுகிற சூழல் ஏற்பட்டது.
Also Read : இது தமிழ்நாடா அல்லது கொலை நாடா…? – பிரேமலதா விளாசல்..!!
காலியான இடங்களை நிரப்ப காலதாமதம் ஆன காரணத்தால் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் ஒப்பந்த அடிப்படையில் எடுக்கப்பட்டார்கள்.
அதன் காரணமாக கோடை காலங்களில் அரசு விரைவு போக்குவரத்து கழகப் பேருந்துகளை சிரமமின்றி இயக்க முடிந்தது, அதிக வருவாயும் ஈட்ட முடிந்தது. பணியாளர்களை தேர்வு செய்த பிறகு ஒப்பந்த ஓட்டுநர் மற்றும் நடத்துனர் முறை கைவிடப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.