`மோடி அரசு சாதனை படைத்துவிட்டது..’ – பிரியங்கா காந்தி

Spread the love

இந்தியாவில் நாளுக்கொருமுறை அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 5-வது நாளாக இன்றும் எண்ணெய் நிறுவனங்களால் உயர்த்தப்பட்டன. மாநிலத் தலைநகரங்கள் அனைத்திலும் பெட்ரோல் விலை லிட்டர் 100 ரூபாயைக் கடந்துவிட்டது. 12க்கும் மேற்பட்ட மாநிலங்களில் டீசல் விலை லிட்டர் 100 ரூபாயை தாண்டிவிட்டது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் நடுத்தர மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். அதுபோல அதிகரித்துவரும் டீசல் விலை உயர்வு சரக்குப் போக்குவரத்துக்கு பெரும் பாதிப்ப ஏற்படுத்தும், அந்த சுமை இறுதியில் நுகர்வோரை தான் நேரடியாக பாதிக்கும். இதுபோன்ற பெட்ரோல்,டீசல் விலை உயர்வால், சாமானிய மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கடுமையாக மத்திய அரசை விமர்சித்துள்ளனர்.

 ராகுல் காந்தி தனது டுவிட்டர் பதிவில்; ‘ பெட்ரோல் விலை நாள்தோறும் உயர்த்தப்பட்டு, வரிக் கொள்ளை நடக்கிறது. ஏதாவது மாநிலங்களில் தேர்தல் நடந்தால்தான் பெட்ரோல், டீசல் விலை உயர்வது நிறுத்தப்படும்’ எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி டுவிட்டர் பதிவில்; ‘ பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு தொடர்ந்து உயர்த்தி வருகிறது. மக்களுக்கு தொல்லைகள், இடர்கள் கொடுப்பதில் மோடி அரசு சாதனை படைத்துவிட்டது.

மோடி அரசில் அதிகமான வேலையின்மை, மோடி அரசில் அரசு சொத்துக்கள் அதிகம் விற்பனை, மோடி அரசில் பெட்ரோல் விலை உயர்வு. இந்த ஆண்டில் மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 23.53 ரூபாய் உயர்ந்துவிட்டது’ எனத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் ‘மக்களுக்கு நல்ல காலம் வந்துவிட்டது. பெட்ரோல் விலை இந்த ஆண்டில் மட்டும் லிட்டருக்கு ரூ.23.53 பைசா அதிகரித்துள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.


Spread the love
Related Posts