கர்நாடகாவில் காங்கிரஸ் வென்ற தொகுதிகளை குறிவைத்து, அங்குள்ள வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டதாக ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வாக்கு திருட்டு குறித்து புதிய ஆதாரங்களை வெளியிட்டுள்ளார். மொத்தம் 6018 வாக்குகளை அழித்துள்ளதாகவும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு இதில் தொடர்பு இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கர்நாடகாவில் ஆலந்து என்கிற தொகுதி இருக்கிறது. அங்கே யாரோ 6,018 வாக்குகளை நீக்க முயன்றிருக்கிறார்கள்.
2023-ம் ஆண்டு தேர்தலின்போது, ஆலந்து தொகுதியில் மொத்தம் எத்தனை வாக்குகள் அழிக்கப்பட்டது என்பது தெரியவில்லை.
அது 6,018-ஐ விட அதிகமாகத்தான் இருக்கும். ஆனால், 6,018 வாக்குகளை அழிக்கும்போது, ஒருவர் எதர்ச்சையாக பிடிப்பட்டுள்ளார்.
பூத் அளவிலான அதிகாரி ஒருவர், அவரின் சொந்தகாரர் ஒருவரின் வாக்கு அழிக்கப்பட்டுள்ளதைக் கவனித்திருக்கிறார்.
அதற்கு பக்கத்து வீட்டுக்காரர் தான் காரணம் என்பதையும் கண்டுபிடித்திருக்கிறார். ஆனால் அந்த நபர் தான் எந்த வாக்கையும் அழிக்கவில்லை என்று கூறியிருக்கிறார்.
இந்தியா முழுவதும் சாப்ட்வேர்கள் மூலம் மில்லியன் கணக்கான காங்கிரஸ் வாக்குகள் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன.
இதுகுறித்து நாங்கள் பல முறை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், இப்போதுதான் 100 சதவிகித ஆதாரம் கிடைத்திருக்கிறது.
அதிக வாக்குகள் நீக்கம் செய்யப்பட்டிருக்கும் வாக்குச் சாவடிகளில் முதல் பத்து காங்கிரஸ் உடையது.
நான் எதிர்க்கட்சித் தலைவராக, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது மிக வலுவான குற்றச்சாட்டு ஒன்றை முன்வைக்க உள்ளேன். ஜனநாயகத்தை அழிப்பவர்களைக் காப்பதை ஞானேஷ் குமார் நிறுத்த வேண்டும்” எனக் கூறினார்.
மேலும், வெளிமாநிலத்தவர்களின் செல்போன் எண்கள், நவீன மென்பொருள், செயலிகள் மூலம் டெல்லியில் இருந்து கொண்டு, கால் சென்டர்கள் இயங்குவதைப் போன்று செயல்பட்டு, வாக்காளர்களுக்கே தெரியாமல் அவர்களின் பெயர்கள் நீக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டினார் ராகுல்.
ஒருவர் 12 நிமிடங்களில் 14 வாக்காளர்களின் பெயர்களை நீக்கியுள்ளதாக கூறிய அவர், இது அனைத்து மாநிலங்களிலும் நடைபெறும் என குறிப்பிட்டார். டெல்லியில் இருந்து கொண்டே தமிழ்நாட்டில் உள்ள வாக்காளர்களுக்கு தெரியாமல் அவர்களின் பெயர்களையும் நீக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.