இந்திய எல்லையை தாண்டி சிங்கள எல்லைக்குள் மீன் பிடித்ததாக கூறி சிங்கள கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். மீனவர்கள் தாக்கப்பட்டு கைது செய்யப்படுவதுடன் அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்படுகிறது.
காலம் காலமாக நடைபெற்று வரும் கொடூர சம்பவங்களுக்கு நிரந்தர தீர்வு கோரி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதும் தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில் ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் மற்றும் பாம்பன் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து நேற்று முன்தினம் சில மீனவர்கள் மீன்பிடிக்க சென்றுள்ளனர் .
அப்போது கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்த 24 தமிழக மீனவர்களையும் 4 விசைப்படகுகளையும் சிங்கள கடற்படை சிறை பிடித்தது.
இந்நிலையில் இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி ஜூலை 5ம் தேதி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக மீனவர்கள் அறிவித்துள்ளனர்.
ஏற்கனவே மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் சிங்கள கடற்படை அடிக்கடி தமிழக மீனவர்களை கைது செய்து சிறையில் அடைப்பது மீனவர்களின் வாழ்க்கையில் பெருந்துயரை கொடுப்பதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.