இராமேஸ்வரம் (Rameswaram) மீனவர்கள் 6 பேரை சிங்களக் கடற்படையினர் கைது செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகவும்
இச்செயல் கடுமையாக கண்டிக்கத்தக்கது எனவும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
ராமேசுவரத்தில் இருந்து நேற்று 480 விசைப்படகுகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
மீனவர்கள் நள்ளிரவில் கச்சத்தீவுக்கும். நெடுந்தீவுக்கும் இடைப்பட்ட பகுதியில் இந்திய கடல் எல்லையில் வலைகளை விரித்து மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர்.
அப்போது அங்கு இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் ஒன்று மின்னல் வேகத்தில் வந்தது. இதனால் அச்சம் அடைந்த மீனவர்கள் பலர் கடலில் வீசியிருந்த வலைகளை சுருட்டிக்கொண்டு புறப்பட்டனர்.
இருப்பினும் இலங்கை கடற்படை 6 மீனவர்களையும் 2 படகுகளையும் கைப்பற்றி சென்றுள்ளது.
இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் தற்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
இதுகுறித்து டாக்டர் அன்புமணி ராமதாஸ் விடுத்துள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்ற இராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரை இலங்கைக் கடற்படை கைது செய்திருக்கிறது. அவர்களின் இரு படகுகளையும் சிங்களப் படையினர் பறிமுதல் செய்திருக்கின்றனர்.
தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக மீன்பிடிக்கும் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது சிங்களப் படையினர் அத்துமீறி கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மொத்தம் 3 நிகழ்வுகளில் 40 தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய அரசின் வலியுறுத்தலை ஏற்று அவர்களை விடுதலை செய்ய இலங்கை அரசு ஒப்புக் கொண்டிருக்கிறது.
அரசின் ஆணை கூட இன்னும் பிறப்பிக்கப்படாத நிலையில் அடுத்தக்கட்டமாக மேலும் 6 மீனவர்களை இலங்கைப் படைகள் அத்துமீறி கைது செய்துள்ளன.
தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் கைது செய்யப்படுவது தொடர்நிகழ்வாகி விட்டன.
(Rameswaram) இலங்கைப் படையினரின் தொடர் அத்துமீறல்கள் காரணமாக தமிழக மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.
Also Read : https://itamiltv.com/isreal-palestine-war-death-count-increase-above-25000/
இலங்கைப் படையினரின் இந்த அத்துமீறலுக்கு நிரந்தரத் தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கைது செய்யப்பட்ட 8 மீனவர்களையும் அவர்களின் படகுகளுடன் மீட்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என டாக்டர் அன்புமணி ராமதாஸ் விடுத்துள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.