முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனை தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், அவர் குற்றமற்றவர் என நிரூபித்து காட்டுவார் என்றும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சி பொறுப்பேற்றபின் கந்தசாமி லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக நியமிக்கப்பட்டார். அதன்பின் ஊழல் புகார்களுக்கு உள்ளான முன்னாள் அதிமுக அமைச்சர்கள் கே.சி.வீரமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி ஆகியோரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், வருமானத்திற்கு அதிகமாக சொத்துகுவித்த புகாரின்பேரில், முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்து சோதனை நடத்தி வருகின்றனர்.
சி.விஜயபாஸ்கருக்கு சொந்தமான புதுக்கோட்டை வீடு மற்றும் கல்வி நிறுவனங்களில் அதிகாலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவை, திருச்சி உள்ளிட்ட 43 இடங்களில் சோதனை தொடர்கிறது.
இந்நிலையில், டாக்டர் விஜயபாஸ்கர் மீது நடத்தப்படும் சோதனை தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும், அவர் குற்றமற்றவர் என நிரூபித்து காட்டுவார் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.