கேரளா மாநிலத்தில் நிபா வைரஸ் தொடர்பாக புதிய பாதிப்புகள் இல்லாத நிலையில், கட்டுபாடுகளில் தளர்வு அளித்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் செப்டம்பர் 12ஆம் தேதி இருவர் காயச்சல் காரணமாக உயிரிழந்தனர். இதனை அடுத்து உயிரிழந்த அவர்களின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், அவர்களுக்கு நிபா வைரஸ் இருந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை அம்மாநில சுகாதாரத்துறை தீவிரமாக கண்காணித்து வந்தது. மேலும் வைரஸ் பாதிப்பு பரவாத வகையில், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இந்நிலையில், புதிதாகயாருக்கும் நிபா வைரஸ் கண்டறியப்படவில்லை என கேரள சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட பஞ்சாயத்து பகுதிகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கடைகள் இரவு 8 மணி வரையும், வங்கிகள் மதியம் 2 மணி வரையும் இயங்கலாம் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். மற்ற கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக கூறிய சுகாதார அமைச்சர் வீனா ஜார்ஜ், “நிபா வைரஸ் தொடர்பாக 61 நபர்களிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. இந்த முடிவுகள் வெளியானதில் 61 நபருக்கும் நிபா வைரஸ் தொற்று இல்லை என தெரிய வந்துள்ளது.
மேலும், பாதிப்புக்குள்ளானவர்களை பராமரித்த சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் எதிர்மறையான முடிவுகள் கிடைத்துள்ளன.
மற்ற மாவட்டங்களிலும் கண்காணிப்பில் உள்ளவர்களின் முடிவுகள் எதிர்மறையாகும் என நம்புகிறோம். நிபா பாதித்த பகுதிகளில் மத்திய குழு நேற்று ஆய்வு நடத்தினர்” என்று தெரிவித்தார்.