‘லியோ’ திரைப்படத்திற்கு அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி கோரிய வழக்கின் விசாரணை நாளை காலை முதல் வழக்காக விசாரிக்கப்படும் என நீதிபதி அனிதா சுமந்த் அறிவித்துள்ளார்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தின் விஜய் நடித்துள்ள ஹிரைப்படம் லியோ. 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து இருக்கிறார்.
இந்த திரைப்படத்தில் பல வருடங்களுக்கு பிறகு விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் உருவாகி உள்ள இந்த திரைப்படம் வரும் 19ம் தேதி உலகம் முழுவதும் திரை அரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படம் வெளியாக இன்னும் சில நாட்கள் இருக்கும் நிலையில், டிக்கெட் புக்கிங் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் ‘லியோ’ திரைப்படத்திற்கு அதிகாலை 4 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதிக்க வேண்டும் என்றும், காலை 9 மணிக்கு பதிலாக 7 மணிக்கே திரையிட அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் பட தயாரிப்பு நிறுவனம் வழக்கு ஒன்றை தொடர்ந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று மதியம் 1 மணிக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கின் விசாரணையை நாளைய தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி அனிதா சுமந்த், நாளை காலை, முதல் வழக்காக விசாரிக்கப்படும் என அறிவித்துள்ளார்.