தொழில்வரியை 35 சதவிகிதம் வரை உயர்த்த தீர்மானம் நிறைவேற்றியிருக்கும் சென்னை மாநகராட்சியின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தினகரன் வெளியிட்டுள்ள கண்டன செய்தியில் கூறிருப்பதாவது :
தொழில்வரியை 35 சதவிகிதம் வரை உயர்த்த தீர்மானம் நிறைவேற்றியிருக்கும் சென்னை மாநகராட்சியின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது – தனி நபர் தொடங்கி தனியார் நிறுவனங்கள் வரை பாதிப்புக்குள்ளாக்கும் சென்னை மாநகராட்சியின் தீர்மானத்தை தமிழக அரசு ஏற்கக் கூடாது.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தனி நபர்கள், தனியார் நிறுவனங்கள், மத்திய மற்றும் மாநில அரசின் ஊழியர்கள் தங்களின் வருமானத்திற்கேற்ப செலுத்தும் தொழில்வரியை 35 சதவிகிதம் வரை உயர்த்தி மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றாண்டுகளில் சொத்துவரி, குடிநீர் கட்டணம், மின் கட்டணம், பால் விலை, பத்திரப்பதிவு கட்டணம் என அனைத்தையும் உயர்த்தி ஏழை, எளிய மக்களின் மீது தாங்க முடியாத சுமையை ஏற்றிய திமுக அரசு, தற்போது தொழில்வரியையும் 35 சதவிகிதம் வரை உயர்த்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
சென்னை மாநகராட்சி மாமன்றத்தில் தொழில்வரி உயர்வுக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் ஒரே சீரான தொழில்வரி நிர்ணயம் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை மாநகராட்சி வழங்கியிருக்கும் பரிந்துரையால் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் தொழில்வரியை 35 சதவிகிதம் வரை உயர்வதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது.
எனவே, தனி நபர் தொடங்கி, தனியார் நிறுவனங்கள் வரை பாதிப்புக்குள்ளாக்கும் தொழில்வரி உயர்வு தொடர்பாக சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஆரம்ப நிலையிலேயே நிராகரிக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என தினகரன் வெளியிட்டுள்ள கண்டன செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.