ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி நாகேந்திரன், எழும்பூர் நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்புடன் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் 5 ஆம் தேதி மர்மநபர்களால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார் .
நடப்பாண்டில்,தமிழகத்தை உலுக்கிய கொடூர கொலையாக பார்க்கப்படும் இந்த கொலை வழக்கில் இதுவரை 24க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான திருவேங்கடம் போலீசார் நடத்திய என்கவுண்டரில் கொல்லப்பட்டார்.
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் வழக்கறிஞர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வரும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பிரபல ரவுடியான நாகேந்திரனின் மகனும், வழக்கறிஞருமான அஸ்வத்தாமன் கைது செய்யப்பட்டார் .
இதையடுத்து அஸ்வத்தாமனிடம் நடத்தப்பட்ட விசாரணையின் பலனாக அவரது தந்தையும் பிரபல ரவுடியுமான நாகேந்திரனின் பெயரும் குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டது .
Also Read : எஸ்.கே தயாரிப்பில் சூரி நடித்த கொட்டுக்காளி படத்தின் அசத்தலான ட்ரைலர் வெளியானது..!!
ஏற்கனவே கொலை வழக்கில் சிக்கி ஆயுள் தண்டனைக் கைதியாக வேலூர் சிறையில் உள்ள நாகேந்திரனை, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்வதற்கான ஆணையை சிறை நிர்வாகத்திடம் செம்பியம் போலீசார் வழங்கிய நிலையில் நாகேந்திரனை செம்பியம் போலீசார் கஸ்டடியில் எடுத்தனர் .
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி நாகேந்திரன், எழும்பூர் நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்புடன் தற்போது ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக 7 நாள் போலீஸ் காவல் கேட்டு செம்பியம் காவல் நிலையத்தினர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர்.