திராவிட மாடல் அரசு என்று மார் தட்டி கொள்ளும் திமுகவிற்கு ஜாதிய கொடுமைகளை ஒழிக்கும் சீர்திருத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று திருமாவளவன் ஏன் கேள்வி எழுப்பவில்லை என்று பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து நாராயணன் திருப்பதி ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
நாங்குநேரியில் பாதிக்கப்பட்ட மாணவர் மற்றும் அவரின் தங்கை பயந்து பயந்து தான் வாழணுமா..இது எப்படி நியாயமாகும்? அந்த குடும்பத்தினருக்கு அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும்.
அங்கே அவர்களால் குடியிருக்க முடியாது என்று அச்சப்படுகிறார்கள். தனியே வேறு பள்ளியில் சேர்ந்து படிப்பதற்கும், வேறு ஒரு இடத்தில் குடி பெயர்வதற்கு ஏற்ற வகையில் வழங்க மாண்புமிகு முதல்வர் அவர்கள் ஆவன செய்ய வேண்டும்” என்று தொல்.திருமாவளவன் வலியுறுத்தி இருந்தார்.
வேறு ஒரு பள்ளியில் ஏன் சேர்க்க வேண்டும்? வேறு ஒரு இடத்தில் ஏன் குடிபெயர வேண்டும்? உண்மையிலேயே சமூக நீதி காக்கும் அரசாக இருந்தால், திராவிட மாடல் அரசு என்று மார் தட்டி கொள்ளும் அரசாக இருந்தால், அதே பள்ளியில்படித்து,
அதே இடத்தில் வாழ்ந்து ஜாதிய கொடுமைகளை ஒழிக்கும் சீர்திருத்தத்தை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றல்லவா தொல்.திருமாவளவன் அவர்கள் வலியுறுத்தியிருக்க வேண்டும்? அதை விடுத்து, வேறு இடத்தில், வேறு பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுப்பது சமூக அநீதியல்லவா? சமத்துவத்திற்கு எதிரானது அல்லவா? மலிவான அரசியல் அல்லவா? சமூக நீதியை விட பதவியும், அதிகாரமும், அரசியலும் பெரிதாகி விட்டது என்பதை உணர்த்தி விட்டீர்களே?
ஐயோ பாவம் உங்களை நம்பி உங்கள் பின்னால் வந்தவர்கள்!!அரசியல்வாதிகள் அனைவரும் ஒதுங்கி கொள்ளுங்கள். ஆர் எஸ் எஸ் பேரியக்கம் அந்த கிராமத்தை தத்தெடுத்து கொள்ளட்டும்.
மிக விரைவில் உண்மையான சமத்துவபுரத்தை நாங்குநேரியில் படைப்போம்! ஆனால், அதை எதிர்ப்பீர்கள். ஏனெனில், அமைதி திரும்ப விரும்ப மாட்டீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.