நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் இயக்குநர் அமீரின் மனதை புண்படுத்தி இருந்தால், அதற்கு நான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அறிவிக்கவிட நிலையில் இந்த வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் இங்க செல்லாது என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவை கண்டித்து சமுத்திரக்கனி காட்டமான அறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாக பருத்திவீரன் படம் தொடர்பாக இயக்குநர் அமீருக்கும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கும் இடையேயான பிரச்னை திரைத்துறையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.
பருத்திவீரன் படத்தில் தன் பணத்தை அமீர் பொய்கணக்குக் கூறி திருடிவிட்டதாக ஞானவேல் ராஜா தெரிவித்தது கடும் சர்ச்சைக்குரிய வகையில் பேசிஇருந்தார். இதற்கு சமுத்திரக்கனி, கரு.பழனியப்பன், பாரதிராஜா, சுதா கொங்கரா,பொன்வண்ணன், கவிஞர் சினேகன் உள்பட திரையுலகை சார்ந்த பலரும் அமீருக்கு ஆதரவு தெரிவித்து இருந்த நிலையில், தன்னுடைய வார்த்தைகள் புண்படுத்தும்படி இருந்திருந்தால் வருத்தம் தெரிவிப்பதாக ஞானவேல் ராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வருத்தம் தெரிவித்ததற்கு இயக்குநர் சமுத்திரக்கனி காட்டமான அறிக்கை வெளியிட்டுள்ளார் அந்த அறிக்கையில் சமுத்திரக்கனி கூறியதாவது :
பிரதர்… இந்த வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் இங்க செல்லாது… நீங்க செய்ய வேண்டியது.,எந்த பொதுவெளியில எகத்தாளமா உக்காந்து கிட்டு அருவருப்பான உடல் மொழியால சேற்ற வாரி இறைச்சீங்களோ… அதே பொது வெளியில் பகிரங்கமா மன்னிப்பு கேக்கணும்..! நீங்க கொடுத்த அந்த கேவலமான, தரங்கெட்ட இன்டெர்வியூ-வை சமூக வலைதளங்களில் இருந்து துடைச்சு தூர எறியணும்…!
அன்னைக்கு கொடுக்காம ஏமாத்திட்டுப் போன பணத்தை ஒத்த பைசா பாக்கி இல்லாம திருப்பிக் கொடுக்கணும். ஏன்னா… கடனா வாங்குன நிறைய பேருக்கு திருப்பிக் கொடுக்க வேண்டியது இருக்கு… அப்புறம் “பருத்திவீரன்” திரைப்படத்தில வேலை பார்த்த நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் பல பேருக்கு இன்னும் சம்பள பாக்கி இருக்கு. பாவம்…அவங்கெல்லாம் எளிமையான குடும்பத்துல இருந்து வந்து வேல பாத்தவங்க…நீங்கதான், “அம்பானி பேமிலியாச்சே..!” காலம் கடந்த நீதி..! மறுக்கப்பட்ட நீதி..! என மிகுந்த கோபத்துடன் சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார்.