தமிழ்நாட்டில் மழை வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ள மக்களுக்கு தேவையான நிவாரண உதவி தொகையை விரைந்து வழங்கிட திமுக தலைமையிலான விளம்பர அரசுக்கு சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் ..
மிக்ஜாம் புயல் காரணமாக தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் மிகப்பெரிய அளவில் பாதிப்படைந்துள்ளன. மிக்ஜாம் புயலால் பெய்த கனமழை நின்று நான்கு நாட்களுக்கு மேலாகியும் இன்று வரை மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்து போயுள்ளது. இதன் காரணமாக தமிழக மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி மிகவும் துன்பப்படுகின்றனர்.
இந்த அளவுக்கு மக்கள் பாதிப்புக்குள்ளானதற்கு திமுக தலைமையிலான அரசு தான் காரணம். மேலும், நிவாரண பணிகளை விரைந்து மேற்கொள்ளாமல், பாதிக்கப்பட்ட மக்களை காக்க தவறிய திமுக தலைமையிலான அரசுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் புயல் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண பொருட்கள் இன்னும் அநேக இடங்களில் வழங்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட பல பகுதிகளில் உள்ள மக்கள் குடிநீர், உணவு போன்ற அத்தியாவசிய தேவைகள் கிடைக்கப்பெறாமல் பரிதவிக்கிறார்கள்.
வீடுகளில் வெள்ள நீர் புகுந்து அருகில் உள்ள பள்ளிகளில் தங்கியவர்களுக்கு உணவு, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் கூட தங்களுக்கு கிடைக்கவில்லை என்று சொல்லி மக்கள் மிகவும் வேதனைப் படுகிறார்கள். சென்னையில் பல இடங்களில் தேங்கிய மழைநீருடன் கழிவு நீரும் கலந்து அப்படியே அகற்றப்படாமல் இருப்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எங்கு பார்த்தாலும் குப்பை கழிவுகள் அப்படியே கிடக்கிறது. பல இடங்களில் கால் நடைகள் இறந்து அகற்றப்படாமல் இருக்கிறது.
ஒரு சில இடங்களில் தண்ணீர் வடியாததால் மின்சார வசதியும் இல்லாமல் மக்கள் இருளில் மூழ்கி உள்ளனர். மழையின் போது பல இடங்களில் முறிந்து விழுந்த மரங்கள் அகற்றப்படாமல் இன்றைக்கும் அப்படியே கிடக்கிறது. இதுபோன்று மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளை ஆரம்பிக்காமல் திமுக தலைமையிலான அரசு மெத்தனமாக இருந்து வருவது மிகவும் கண்டனத்திற்குரியது.
மிக்ஜாம் புயல் தாக்கத்தால் இதுவரை 23 நபர்களுக்கு மேல் பலியாகியிருப்பதாக பல ஊடங்கங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் திமுக தலைமையிலான அரசு உண்மையில் பலியானவர்கள் எத்தனை நபர்கள்? என்பதை தெரிவிக்காமல் மூடி மறைப்பது மிகவும் கணடனத்திற்குரியது.
மேலும், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சியின் போது மழைவெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான குடிசைகளில் வசித்த குடும்பங்களுக்குத் தலா 5,000 ரூபாய் நிவாரணமாக வழங்கியது. மேலும், வீடுகளில் வெள்ளம் புகுந்து, உடைகள், பாத்திரங்கள் போன்ற தனிப்பட்ட உடமைகள் பாதிக்கப்பட்டிருந்தால் அந்தக் குடும்பங்களுக்கு 5,000 ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட்டது.
ஆனால், இன்றைய திமுக தலைமையிலான ஆட்சியில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் படும் கஷ்டங்களை பார்க்கவே மிகவும் வேதனையாக இருக்கிறது. இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் என்ற புரட்சித்தலைவரின் பாடல் வரிகளுக்கேற்ப தமிழக மக்கள் அனைவரும் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இந்த கடினமான நேரத்தில் இன்றைக்கு நம்மோடு இல்லையே என்று சொல்லி மிகவும் ஏங்கி தவிக்கிறார்கள்.
எனவே, திமுக தலைமையிலான அரசு ஐந்து நாட்களாகியும் மழை நீர் வடியாமல் தேங்கியுள்ள பகுதிகளில் உள்ள வெள்ள நீரை ராட்சத மின் மோட்டார்களை வைத்து போர்க்கால அடிப்படையில் விரைந்து அகற்ற வேண்டும். ஆங்காங்கே முறிந்து விழுந்த மரங்கள், தேங்கியுள்ள குப்பைகளை விரைந்து அகற்ற வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருத்துவ முகாம்களை ஏதோ கண் துடைப்புக்காக நடத்துவது என்று இல்லாமல், மக்களுக்கு மிகவும் பயனளிக்கின்ற வகையில் முறையான மருத்துவ முகாம்களை நடத்துவதன் மூலம் தொற்று நோய் பரவாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
ரேஷன் பொருட்கள் வாங்க முடியாமல் போனவர்களுக்கு உடனே வழங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அனைத்து பகுதிகளிலும் உடனே மின்சாரம் வழங்க வேண்டும். மேலும் தற்போது செலுத்தவேண்டிய மின்கட்டணத்தை தாமதமாக செலுத்துவதற்கு குறைந்தது இரண்டு மாதங்களாவது அனுமதி அளிக்க வேண்டும்.
மேலும், புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சியில் 8 ஆண்டுகளுக்கு முன்னரே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை நிவாரண உதவி தொகையாக வழங்கப்பட்டதை எண்ணிப்பார்த்து இன்றைய தேதியில் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசியை கருத்தில் கொண்டு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கூடுதலாக நிவாரண உதவி தொகை வழங்க வேண்டும் என திமுக தலைமையிலான விளம்பர அரசைக் கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.