பழனி அருகே அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பழனி அருகே அரசு உதவி பெறும் உயர்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் தற்காலிக ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருபவர் 30 வயதான நாட்ராயன். ஏற்கெனவே திருமணமான இவர், அதே பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் மாணவியிடம், தான் அச்சிறுமியை திருமணம் செய்துக்கொள்வதாக பேசிவந்துள்ளார்.
கடந்த ஓராண்டாக திருமணம் தொடர்பாக பேசி வந்த ஆசிரியர், தனது விட்டுக்கு அவ்வபோது அந்த மாணவியை அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து மாணவியின் தாயாருக்கு தெரியவந்ததைத் தொடர்ந்து, உடனடியாக பழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆசிரியர் நாட்ராயன் மீது புகார் அளித்துள்ளார்.
புகாரை அடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்த காவல்துறையினர் உடனடியாக ஆசிரியரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனை விசாரித்த நீதிபதி 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதை அடுத்து நாட்ராயன் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.