விழுப்புரம் அருகே அரசின் செயல்பாடுகளை விமர்சித்த பள்ளி மாணவன் மீது கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவத்திற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே சேதமடைந்த சாலைகளை சுட்டிக்காட்டி அரசை விமர்சனம் செய்த 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவர் மீது அப்பகுதி திமுகவினர், கொடூரத் தாக்குதல் நடத்தியிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.
ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றாண்டுகளில் தமிழகமெங்கும் குண்டும் குழியுமாக சேதமடைந்திருக்கும் சாலைகளை சீரமைக்கவோ, மேம்படுத்தவோ திமுக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், சாலையின் தரம் குறித்து விமர்சனம் செய்த பள்ளி மாணவரை கண்மூடித்தனமாக தாக்கியிருக்கும் திமுகவினரின் அராஜகப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
அரசு நிர்வாகத்தின் குறைகளை சுட்டிக்காட்டும் போது அதனை நிவர்த்தி செய்ய முன்வராமல், புகார் கூறுவோர்கள் மீது தாக்குதல் நடத்தி அடக்குமுறையை கையாள்வதன் மூலம் இது எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சியா ? இல்லை குறையை சொல்லவே விடாத ஆட்சியா? என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.
எனவே, பள்ளி மாணவரை தாக்கிய திமுகவினர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, இனிவரும் காலங்களில் இதுபோன்ற அராஜகப் போக்கில் ஈடுபடாத வகையில் திமுகவினருக்கு உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும் என முதலமைச்சரும் திமுக தலைவருமான திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன் என டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.