ஐ தமிழ் நேயர்களுக்கு வணக்கம்.
இராகுபகவான் தனித்தும், கேதுபகவானுடன் இணைந்தும் அருள்பாலிக்கும் தலங்கள் பலவற்றை தரிசித்திருப்பீர்கள். ஆனால் இராகுபகவான் உருவான ஆதி இராகுத்தலம் இதுதான் என்ற சிறப்பு இத்தலத்திற்கு உண்டு.
அதுபோல, இராகுபகவானுடன், சனிபகவான் மனைவி நீலாதேவியுடன், மங்கள சனீஸ்வரராக காட்சி தரும் தலமும் இதுதான் என்ற பெருமையும் இதற்கு உண்டு.
இத்தகைய பழைமை வாய்ந்த திருத்தலம் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி கடைவீதியில் அமைந்துள்ளது.இங்கு பொன்நாகவள்ளி அம்மன் உடனாகிய நாகேஸ்வரமுடையார் அருள்பாலிக்கிறார்.
ஒரே தலத்தில் இராகு, கேது மற்றும் சனி, தோஷங்கள் விலகி, வாழ்வில் வளம்பெற, திரளாகப் பக்தர்கள் கூடும் இத்திருத்தலத்திற்கு உங்களை அழைத்துச் செல்வதில் ஐ தமிழ் பெருமகிழ்ச்சி கொள்கிறது.
இக்கோயிலில் தட்சிணாமூர்த்தி, வள்ளி தெய்வானை உடனாகிய முருகப்பெருமான், கேது பகவான் ஆகிய சுவாமிகள் பிரகாரங்களில் தனி சந்நதிகளில் அமைந்துள்ளனர்.
அரச மரமும், வேப்ப மரமும் ஒன்றாக இணைந்திருக்க, அதனடியில் நாகர் சந்நதி அமைந்துள்ளது. நாக தோஷம் உள்ள பக்தர்கள் நாகர்கள் வீற்றிருக்கும், இந்த தெய்வீக மரங்களை வலம் வந்து தரிசனம் செய்கின்றனர்.
“முன்னொரு காலத்தில் வாசுகி என்ற பாம்பினை கயிறாகக் கொண்டு, தேவர்களும், அசுர்ர்களும் திருப்பாற்கடலைக் கடைந்தபோது, அதில் அமிர்தம் உருவாகியது. அந்த அமிர்தத்தை விஷ்ணு, தேவர்களுக்கு வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது சிறந்த சிவபக்தரும், தான் நினைத்த உருவில் மாறக்கூடிய வரம்பெற்ற சண்டிகேயன் என்ற அசுரர் ஒருவர் தேவர் வேடம் பூண்டு, அமிர்தத்தை பெற்று அதிக சக்தி வாய்ந்தவராக மாறினார்.
இதனை சூரியனும்,சந்திரனும் கண்காணித்து அமிர்தம் வழங்கிக் கொண்டிருந்த விஷ்ணுவிடம் கூறினர்.அதனால் கோபமுற்ற விஷ்ணு அமிர்தம் வழங்கிய கரண்டியால் அசுரர் தலையில் ஓங்கி அடித்தார். இதில் அசுரர் தலை தனியாக சிரபுறம் எனும் சீர்காழியில் விழுந்தது. அதன்பின் அமிர்தம் உண்ட அசுரரான சண்டிகேயன் மனிதத் தலையுடன், பாம்பு உடலைக் கொண்டு, அமிர்த இராகுபகவானாகத் தோன்றி, இத்தலத்தில் அருள்பாலிக்கிறார்.
சனிபகவான் அவரது மனைவி நிலாதேவியுடன் மங்கள சனீஸ்வரனாக காட்சி தருகிறார். இங்கு சனிபகவானுக்கு கருப்புநிற வஸ்திரம் அணிவிக்காமல், கருநீலம் மற்றும் நீலநிற வஸ்திரங்கள் மட்டுமே அணிவிக்கப்படுவது தனி சிறப்பு ” என்கிறது தலவரலாறு.
திருமணத்தடை, புத்திர பாக்கியம் ,வியாபார அபிவிருத்தி, வேலை வாய்ப்பு,கடன் நிவர்த்தி போன்ற பிரார்த்தனைகள் நிறைவேற, பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் வருகை புரிந்து, அமிர்த இராகுபகவானை அர்ச்சனை செய்து வழிபடுகின்றனர்.
“உலகில் முதன்முதல் தோன்றிய ஆதி அமிர்த இராகுபகவான்,தம்பதி சமேதரராய் காட்சி தரும் சனிபகவான் மற்றும் கேதுபகவான் ஆகிய மூவரையும் இத்தலத்தில் வழிபடுவோர் சர்வதோஷ நிவர்த்தி பெறலாம்.
இராகுபகவானுக்கு கருப்பு உளுந்தில் நான்கு தீபமும்,கேதுபகவானுக்கு கொள்ளுமீது ஏழு தீபமும் ஏற்றி வணங்கினால் எண்ணிய காரியங்கள் யாவும் சித்திப்பெறுவது உறுதி ” என்கிறார் முத்து குருக்கள்.
மீண்டும் ஓர் அற்புதமான ஆலயத்தில் சந்திக்கும் வரை, உங்களிடமிருந்து விடைபெறுவது ஐ தமிழ் !