அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துதுறை அமைச்சராக இருந்த போது அரசு வேலை வாங்கி தருவதாக கூறி சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடைச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது செய்யப்பட்டார்.
புழல் சிறையில் நீதிமன்ற காவலில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்தன. இதையடுத்து, அவருக்கு ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனிருதா போஸ், பீலா எம்.திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இருதரப்பிலும் ஆஜராகி வாதிட வேண்டிய வழக்கறிஞர்கள் மற்றொரு வழக்கில் ஆஜராகியுள்ளதால் விசாரணையை சிறிது நேரம் தள்ளிவைக்க கோரப்பட்டது.
மேலும் செந்தில் பாலாஜியின் உடல்நிலையை கருத்தில்கொண்டு இந்த மனுவை விரைவாக விசாரிக்க கோரப்பட்டது. அதற்கு நீதிபதிகள், “அவ்வளவு அவசரம் என்றால் உங்களது தரப்பு வழக்கறிஞர் இன்று ஆஜராகி இருக்க வேண்டும்” என கூறி விசாரணையை நவ.6-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.