சட்ட விரோத பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகிறார்.
அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடியில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், இது குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் பல மாதங்களாக நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் இரண்டு மாதங்களில் வழக்கை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, கடந்த ஜூன் மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி அவரை கைது செய்தது.
அப்போது திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து செந்தில்பாலாஜி மீது ஐந்து நாட்கள் விசாரணை நடத்தியபின், மீண்டும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையே, செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கை எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதனடிப்படையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி, சுமார் ஒரு மாதங்களுக்கு பிறகு போலீஸ் வாகனம் மூலம் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார்.
நீதிமன்ற வளாகத்தில் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் அதிகளவு கூடுவார்கள் என எதிர்பார்ப்பதால் அதிகாலை முதலே அதிகளவில் போலீஸார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.