”ஆம்னி பேருந்து கட்டணக் கொள்..” அரசு இனியும் அனுமதிக்கக்கூடாது..- அன்புமணி காட்டம்!!

தமிழகத்துல் ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை நிர்ணயிக்க தன்னாட்சி அதிகாரம் கொண்ட ஆணையத்தை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

தமிழகத்துல் காந்தியடிகள் பிறந்த நாள், பூசை விடுமுறை, தீப ஒளி திருநாள் விடுமுறை ஆகியவற்றைப் பயன்படுத்தி ஆம்னி பேருந்துகள் வரலாறு காணாத கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டிருக்கின்றன.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்..

சென்னையிலிருந்து மதுரைக்கு செல்லவும், அங்கிருந்து சென்னை திரும்பவும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் இருக்கை வசதி கொண்ட சொகுசு பேருந்துகளில் ரூ.459, படுக்கை வசதி பேருந்துகளில் ரூ.920 மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதை விட தனியார் பேருந்துகளில் 10 மடங்கு வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

ஆனால், அரசோ அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் பெயரளவில் சில பேருந்துகளுக்கு மட்டும் சில ஆயிரங்களை தண்டமாக விதித்து விட்டு கட்டணக் கொள்ளையில் ஈடுபட்ட பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டதாக கூறி விடுகிறது. சில நேரங்களில் தமிழக அரசின் போக்குவரத்துத் துறை அமைச்சர், தாம் யார் என்பதையே மறந்து விட்டு, “ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சேவை செய்யவில்லை.

அரசு பேருந்து கட்டணத்தை, தனியார் பேருந்து கட்டணத்தோடு ஒப்பிடுவது தவறு. தனியார் பேருந்து கட்டணம் அதிகம் என்று தெரிந்துதான் மக்கள் பயணம் செய்கிறார்கள். அவர்கள் புகாரும் செய்யவில்லை. தனியார் பேருந்துகளின் கட்டணம் ஏழை மக்களை பாதிக்கவில்லை” என்று விளக்கம் அளிக்கிறார்.

இது தான் தனியார் ஆம்னி பேருந்துகள் அவற்றின் விருப்பம் போல கட்டணக் கொள்ளையில் ஈடுபடுவதற்கான துணிச்சலை அளிக்கிறது. ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளை காலம் காலமாகவே தொடர்கிறது. அதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பலமுறை ஆணையிட்டிருக்கிறது.

ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை அவற்றின் உரிமையாளர்களே நிர்ணயித்துக் கொள்ள அனுமதிப்பது சட்ட விரோதமானது. மோட்டார் வாகன சட்டத்தின் 67வது பிரிவின் படி ஆம்னி பேருந்து கட்டணத்தை தமிழக அரசு தான் நிர்ணயிக்க வேண்டும். கட்டணத்தை எவ்வாறு நிர்ணயிப்பது என்பது குறித்து அரசுக்கு பரிந்துரை அளிக்க உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் 5 பேர் குழுவை அமைக்க வேண்டும்” என்று 2016ம் ஆண்டு நவம்பர் 15ம் தேதி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஆனால், அந்தத் தீர்ப்பின் மீது 7 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையை தமிழக அரசு இனியும் அனுமதிக்கக்கூடாது. மக்கள் நலனைக் கருத்தில் கொண்டும், இது தொடர்பான சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புகளைக் கருத்தில் கொண்டும் தமிழகத்தில் ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை நிர்ணயிக்க தன்னாட்சி அதிகாரம் கொண்ட ஆணையத்தை ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் தமிழக அரசு அமைக்க வேண்டும்.

ஆணையம் நிர்ணயித்ததை விட அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளின் உரிமத்தை ரத்து செய்யவும், லட்சக் கணக்கில் தண்டம் விதிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Total
0
Shares
Related Posts