கடந்த சில நாட்களாக மேற்குவங்க மருத்துவ மாணவியின் கொடூர பாலியல் படுகொலை சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கிக்கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு சில மணிநேரத்திற்கும் பதற வைக்கும் புதுப்புது தகவல்களும் வந்துகொண்டிருக்கின்றன. அந்த பரபரப்பின் வெப்பமே அடங்காத நிலையில் தற்போது மீண்டும் ஒரு மருத்துவ செவிலியரின் பாலியல் வன்புணர்வு படுகொலை சம்பவம் பெரும் கோபத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேசத்தை சேர்ந்த செவிலியர் ஒருவர் உத்தரகாண்ட் மாநிலம் உத்தம் சிங் நகர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த ஜூலை 30 ஆம் தேதி இந்த சம்பவம் நடந்த அன்று பணிக்கு சென்ற செவிலியர் வீடு வந்து சேரவில்லை. மறுநாள் காலையில், ‘தனது சகோதரி இன்னும் வீட்டிற்கு வரவில்லை’ என செவிலியரின் சகோதரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதன் பேரில் போலீஸார் விசாரணையை தொடங்கினர். தொடர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட காவல்துறை இறுதியாக செவிலியர் உடல் அழுகிய நிலையில் 8 நாட்களுக்குப் பிறகு அவரது சொந்த கிராமமான உத்தரப் பிரதேச மாநிலம் பிலாஸ்பூர் பகுதி புதருக்குள் தற்போது கண்டெடுக்கப்பட்டது.
இதையும் படிங்க : அதிகரிக்கும் குரங்கு அம்மை பரவல் – அவசர நிலையை அறிவித்தது உலக சுகாதார அமைப்பு..!!
பாலியல் வன்கொடுமை செய்து, கழுத்து நெரிக்கப்பட்டு செவிலியர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதை பிரேத பரிசோதனை ஆய்வு முடிவுகள் உறுதி செய்துள்ளன. செவிலியரின் மொபைல் எண்ணை அடிப்படையாக கொண்டு காவல் துறையினர் தங்களது தேடுதலை தொடங்கியுள்ளனர்.
போலீசார் அளித்துள்ள தகவலில், ஜூலை 30 ஆம் தேதி செவிலியர் தனது பணியை முடித்து விட்டு, தனியாக வீடு திரும்பியுள்ளார். அப்போது, இவர் தனியாக செல்வதை கண்ட தர்மேந்திர குமார் என்ற நபர் இவரை பின் தொடர்ந்து சென்று , அப்பெண்ணை தாக்கியுள்ளார்.
அவரிடமிருந்து தப்பிச் செல்ல கடுமையாக போராடி உள்ளார் செவிலியர். ஆனால் அவரால் தப்பித்துச் செல்ல முடியவில்லை. இந்நிலையில், செவிலியரின் கழுத்தை நெறித்துக் கொன்ற அந்நபர், அவரை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அப்பெண்ணின் உடமைகளையும் ரூ.30 ஆயிரம் ரூபாய் பணத்தையும் செல்போனையும் எடுத்து கொண்டு அப்பகுதியிலிருந்து தப்பித்துச் சென்றுள்ளார்.
இந்நிலையில்தான், இந்நபர் எடுத்து சென்ற அப்பெண்ணின் செல்போன் ராஜஸ்தானில் கிடைத்துள்ளது. இதன்மூலம் விரட்டி பிடிக்கப்பட்ட அந்நபரை, விசாரித்ததில் இவர்தான் குற்றத்தை செய்தார் என்று ஒப்புக்கொண்டார். குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்று தரப்படும் என போலீஸார் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
தொடரும் பாலியல் வன்முறை மற்றும் படுகொலைகளால் சமூகத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது. குற்றங்கள் பெருகுவதற்கு காரணம் முறையான நடவடிக்கைகளும், கடுமையான சட்டங்களும் இல்லை. பல வழக்குகளில் காவல்துறை மெத்தனப்போக்கோடு செயல்படுகிறது என விமர்சிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.