Site icon itamiltv.com

பூந்தமல்லி தவெக வேட்பாளர் மீது பாலியல் புகார் – 6 பிரிவுகளில் வழக்கு!

தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் ஆனந்த் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், அக்கட்சியின் பெண் நிர்வாகிக்கு பாலியல் சீண்டல் ஏற்பட்டதாக கூறி பூந்தமல்லி தொகுதி வேட்பாளர் பிரகாசம் (குட்டி) மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளராக உள்ள பிரகாசம், கட்சித் தலைவர் விஜய் அறிவித்த வேட்பாளர் பட்டியலில் பூந்தமல்லி தொகுதிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

இந்த நிலையில், ஆறு மாதங்களுக்கு முன்பு திருவள்ளூரில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இந்த குற்றச்சாட்டு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அந்த நிகழ்ச்சியில் ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்த நிலையில், மகளிர் அணி நிர்வாகி ஒருவரிடம் பிரகாசம் தவறாக நடந்துகொண்டதாக புகார் எழுந்தது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் கட்சி தலைமையிடம் முன்பே புகார் அளித்ததாகவும், ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

பின்னர், நேற்று அந்த பெண் தனது கணவருடன் திருவள்ளூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் நேரடியாக புகார் அளித்தார்.

அந்த புகாரின் அடிப்படையில், திருவள்ளூர் போலீசார் பிரகாசம் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை தொடங்கினர்.

முதற்கட்டமாக புகார் அளித்த பெண்ணிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, தொடர்ந்து பிரகாசத்திடமும் விசாரணை நடத்தப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், இந்த குற்றச்சாட்டு பொய்யானது என்றும், பதவி தொடர்பான மனக்கசப்பால் இவ்வாறு புகார் அளிக்கப்பட்டதாகவும் கூறி, பிரகாசத்தின் மனைவியும் போலீசில் எதிர் புகார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version