ஷாருக்கான் (Shah Rukh Khan’s) நடிப்பில் வெளியாகியுள்ள ‘பதான்’ திரைப்படம் உலக அளவில் 901 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் (Shah Rukh Khan’s), தீபிகா படுகோன், ஜான் ஆபிரஹாம் நடித்த ‘பதான்’ திரைப்படம் கடந்த 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இந்த படத்தை ஆதித்யா சோப்ரா தயாரித்துள்ளார். இந்நிலையில், படத்தில் வரும் ‘பேஷரம் ரங்’ பாடல் காட்சியில் தீபிகா அணிந்திருந்த காவி பிகினி உடை, நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இப்படத்திற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியது.
ஆனால், அந்த எதிர்ப்புகளை மீறி வெளியான ‘பதான்’ படம் தற்போது வசூலில் சாதனைப் படைத்து வருகிறது. மேலும், 4 ஆண்டுகளுக்குப் பிறகு ஷாருக்கான் நடிப்பில் வெளியாகியுள்ள படம் என்பதால், படத்தைப் பார்க்க ரசிகர்கள் தியேட்டரில் குவிந்து வருகின்றனர்.
இந்நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.106 கோடி வசூல் செய்தது. மேலும், அடுத்தடுத்த நாட்களிலும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து, 4 நாட்களில் ரூ.400 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.
மேலும், பதான் திரைப்படம் வெளியாகி 17 நாட்களில் உலக அளவில் 901 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இதனையடுத்து, இதுதொடர்பாக தயாரிப்பு நிறுவனமான யாஷ்ராஜ் பிலிம்ஸ் கூறுகையில், உலக அளவில் பதான் திரைப்படம் 901 கோடி ரூபாய் வசூலித்துள்ளது எனவும், இந்தியாவில் மொத்தமாக ரூ.558.40 கோடி ரூபாயும் வெளிநாடுகளில் 342.60 கோடி ரூபாயும் வசூலித்துள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
மேலும், இந்தி சினிமா வரலாற்றில் பதான் திரைப்படம் உலக அளவில் அதிக வசூல் செய்த படமாக மாறியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது.