நியாய விலைக்கடைகளில் மூன்றாவது மாதமாக தொடரும் அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு – ஏழை, எளிய மக்களை அலைக்கழிக்கும் திமுக அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது..
“தமிழகத்தில் இயங்கி வரும் நியாய விலைக்கடைகளில் தொடர்ந்து மூன்றாவது மாதமாக பருப்பு, பாமாயில் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு ஏற்பட்டிருக்கும் கடும் தட்டுப்பாட்டால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே, கடந்த மே மற்றும் ஜூன் ஆகிய இரு மாதங்களில் வழங்கப்பட வேண்டிய அத்தியாவசியப் பொருட்கள் முறையாக விநியோகம் செய்யப்படாத நிலையில், நடப்பு மாதத்திலும் பாமாயில், பருப்பு போன்ற பொருட்களை வழங்காமல் குடும்ப அட்டைதாரர்களை அலைக்கழிப்பது கடும் கண்டனத்திற்குரியது.
நியாய விலைக்கடைகளில் வழங்கப்படும் சர்க்கரையின் அளவு அதிகரிக்கப்படும், உளுத்தம்பருப்பு மீண்டும் வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படாத நிலையில், ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த அத்தியாவசியப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பது பொது விநியோகத்தை நடைமுறைப்படுத்துவதில் திமுக அரசின் தோல்வியை வெளிப்படுத்துகிறது.
நியாய விலைக்கடைகளில் நிலவும் அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு குறித்து பலமுறை சுட்டிக்காட்டியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசால், பருப்பு, பாமாயில் போன்ற அத்தியாவசியப் பொருட்களை அதிக விலை கொடுத்து வெளிச்சந்தையில் வாங்கும் சூழலுக்கு தமிழக மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே, வழக்கம் போல இம்முறையும் ஏதாவது காரணத்தைக் கூறி காலம் தாழ்த்தாமல், தமிழகத்தில் இயங்கிவரும் நியாய விலைக்கடைகளில் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் தடையின்றி கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.” என கூறப்பட்டுள்ளது.