கடந்த ஜூலை 23 ஆம் தேதி மத்திய பாஜக அரசு 2024-25 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தது. ஒருபுறம் சில தங்கம், வெள்ளி உள்பட பல பொருட்களின் விலை குறைக்கப்பட்டது உள்ளிட்ட சில நேர்மறையான பார்வைகல் இருக்க, மறுபுறம் பீகார், ஆந்திராவை தவிர மற்ற மாநிலங்கள் குறிப்பாக தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு சிறப்பு திட்டங்கள் ஒன்று கூட அறிவிக்காதது; ஏன் பெயரைக்கூட சொல்லாததுன்னு ஏராளமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது.
“தோற்கடித்தவர்களை பழிவாங்க வேண்டாம்” என முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட இண்டியா கூட்டணி கட்சியினர் அனைவரும் கடுமையாக விமர்சித்து வரும் இந்த பட்ஜெட்டை எதிர்த்து திமுக சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து இன்று மாலை 4 மணியளவில் காங்கிரஸ் கட்சியினர் அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம் நடைபெறுகிறது; அடுத்த மாதம் 01 ஆம் தேதி இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளன. குறிப்பாக இந்த இடத்தில் கவனிக்க வேண்டியது இன்றைய ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டணி கட்சிகள் யாரையும் திமுக அழைக்கவில்லை.
இந்நிலையில், இப்போராட்டத்தை உள்ளார்ந்து பார்க்கும் சில உள்ளங்களுக்குள் ஒரு மூலையில் எழும் கேள்வி, “பாஜகவிற்கு எதிரான இந்த ஆர்ப்பாட்டத்தை திமுக கூட்டணி கட்சிகள் ஏன் தனித்தனியாக நடத்த வேண்டும்? தோழமை கட்சிகள் தோளோடு தோள் கொடுத்து எதிர்ப்பை பதிவு செய்வதில் என்ன சுணக்கம்? அப்படி என்ன பிரச்சனை கூட்டணிக்குள்?” என்பவை தான் அக்கேள்விகள்.
அந்த கேள்விகளுக்கான பதில் தேடும் கோணத்தில் தேடுகையில் சில கடந்த கால விடயங்கள் பதில்களாகவும், இணைப்பு புள்ளிகளாகவும் கிடைத்துள்ளன. அதாவது, ‘மின் கட்டண உயர்வும் அதானி-முதல்வர் குடும்ப சந்திப்பு என்ற தகவலும்; அம்பானி இல்ல விழாவில் திமுக அமைச்சர்; காங்கிரஸ் கட்சியினரின் சமீபத்திய பேச்சுகளும் திமுகவின் கோபமும்; பா.ரஞ்சித்தை மையப்படுத்தி திமுக vs விசிக என எழுந்த பேச்சுகள்; இவை எல்லாவற்றிற்கும் மேலாக, முன்கூட்டியே தேர்தல் என வெளியாகும் தகவல்; ‘தனித்து போட்டியிடவும் தயாராக இருக்க வேண்டும்’ என நிர்வாகிகளிடையே முதல்வர் கூறியதாக வெளியான தகவல்’ என சமீபத்திய சம்பவங்களும் தகவல்களும் “திமுக கூட்டணிக்குள் ஒரு புகைச்சல் கிளம்பியுள்ளதோ?” என்ற கேள்வியை அழுத்தமாகவே எழுப்புகின்றன.
“இத்தகைய நிகழ்வுகளால் எழுந்த மனக்கசப்புகள் தான் திமுகவையும் அதன் கூட்டணி கட்சிகளையும் தனித்தனியாக முடிவெடுக்க வைத்திருக்கலாம்” என கூறும் அரசியல் விமர்சகர்கள், “தன்னிச்சையான போராட்டங்கள் மூலம் கூட்டணி கட்சிகளும் தங்களை தனித்துவமாக மக்கள் மத்தியில் காட்டிக்கொள்ள முடியும் என்பது கூடுதல் பாயிண்ட்” என்றும் சொல்கின்றனர்.
தாக்க வரும் சிங்கத்தை வலுவாக எதிர்க்க மாடுகள் அனைத்தும் ஒன்றாக இருக்க வேண்டியது அவசியம்! இல்லையென்றால் சிங்கத்தின் காட்டில் விருந்து தான்!!