உத்தரப் பிரதேச மாநிலம் அம்ரோகா மாவட்டத்தில் 14 வயது சிறுவன் ஒருவனை பாம்பு கடித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்திற்குப் பிறகு பெற்றோர் அவனை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல், மந்திரவாதியின் ஆலோசனையை நம்பியுள்ளனர்.
மந்திரவாதி கூறியதாவது, பாம்பு விஷம் உடலில் இருந்து வெளியேற வேண்டுமெனில் சிறுவனை புனித கங்கை நதியில் நீண்ட நேரம் மூழ்க வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
கங்கை நீரில் மூழ்கினால் விஷம் நீங்கும் என்ற தவறான நம்பிக்கையை பெற்றோர் ஏற்றுக்கொண்டனர்.
இதையடுத்து உறவினர்கள் சிறுவனை மூங்கில் போன்ற தற்காலிக அமைப்பில் கட்டி, கங்கை ஆற்றில் சுமார் 12 மணி நேரம் வைத்திருந்துள்ளனர்.
அந்த நேரத்தில் சிறுவன் நீரில் அசைவின்றி இருந்ததாகவும், சுற்றிலும் பலர் இதை பார்த்துக்கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
சிலர் எந்த மாற்றமும் வரும் என காத்திருந்ததாகவும் தெரிகிறது.ஆனால் நீண்ட நேரம் கழித்தும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
சரியான மருத்துவ சிகிச்சை கிடைக்காததும், நீண்ட நேரம் குளிர்ந்த நீரில் இருந்ததும் சிறுவனின் நிலையை மேலும் மோசமாக்கியது. இறுதியில் அவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதில் மக்கள் சம்பவத்தைச் சுற்றி கூடியிருப்பதும், சிறுவன் நீரில் அசைவின்றி இருப்பதும் பதிவாகியுள்ளது.
இச்சம்பவத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பாம்பு கடித்தால் உடனடி மருத்துவ சிகிச்சை அவசியம் என்பதையும், மூடநம்பிக்கைகளை நம்புவது உயிருக்கு ஆபத்தானது என்பதையும் மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

