கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில் சிறப்பு வகுப்புகளைக் கட்டாயம் நடத்தக்கூடாது. மீறும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
கோடை விடுமுறை காலத்தில் தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்துவது தெரிய வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் எச்சரித்தனர்.
தமிழகத்தில் அரசு, தனியார் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஏற்கனவே பொதுத் தேர்வு, பள்ளி இறுதித்தேர்வுகள் அனைத்து நிறைவு பெற்றுள்ளன.இதைத் தொடர்ந்து மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்கியுள்ளது.
இந்த நிலையில், கோடை விடுமுறை நாள்களில் சில தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாகவும், தொடர்ந்து நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் வரப்பெற்றுள்ள புகார்களை அடுத்து, கோடை காலத்தில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: குயில், புயல், வெள்ளம், மக்கள்…. வைரமுத்துவின் ட்விட் சொல்வது என்ன?
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் :அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் வணக்கம்.
தமிழக அரசு கோடை விடுமுறை அனைத்துப் பள்ளிகளுக்கும் அறிவித்தப் பின்னரும் பல்வேறு பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்துவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.
கடுமையான வெப்பம் நிலவும் இக்காலத்தில் கட்டாயமாக சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று தங்களது ஆளுகைக்குட்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம். மீறி சிறப்பு வகுப்புகள் எடுக்கும் பள்ளிகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இதில் அனைத்துக் கல்வி அலுவலர்களும் சிறப்புக் கவனம் செலுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.