ஐ தமிழ் நேயர்களுக்கு அன்பான வணக்கம் .
“அஸ்த நட்சத்திரக்காரர்கள் அவசியம் இத்தலத்தை வந்து தரிசிக்க வேண்டும். ஏன் தெரியுமா ? “
சிவனின் திருவிளையாடலால் பிரிந்த பார்வதிதேவி,அஸ்த நட்சத்திர நாளில் மீண்டும் சிவனோடு இணைந்த தலம் இதுதான்.
அத்தகைய அற்புத கோயிலுக்கு, இன்று உங்களை அழைத்து செல்கிறது ஐ தமிழ் !
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே இருக்கிறது கோமல். புராதன பெருமை கொண்ட இவ்வூரில் 1,000 ஆண்டுகளுக்கு முன்பே கோயில் கொண்டு அருள்பாலிக்கிறார் ஸ்ரீ அன்னபூரணி அம்பாள் சமேத ஸ்ரீ கிருபா கூபாரேஸ்வரர்.
“சிவபெருமான் இந்த உலகத்தை எப்படி இயக்குகிறார் ? ” என்பதை அறிய விரும்பினாள் பார்வதிதேவி. இதுபற்றி அவரிடமே கேட்டாள். அப்போது சிவன் ஒரு திருவிளையாடல் நடத்தினார். பார்வதி தன்னை மறந்து, விளையாட்டாக தனது கண்களை பொத்தும்படி செய்தார்.
அந்த நொடியில் உலக இயக்கமே நின்று போனது. இதனைக் கண்டு அதிர்ந்துபோன பார்வதி, தன்னால் நிகழ்ந்த இந்தத் தவறுக்கு, சிவனிடம் மன்னிப்புக் கோரினார்.
அதற்கு சிவபெருமான் ” உன் கரத்தினால் என் கண்களை பொத்தி, இந்த பிரபஞ்சத்தை இருளாக்கிவிட்டாய். இப்பொழுது என் கரத்திலிருந்து தோன்றும், ஹஸ்தாவர்ண ஜோதியில் நான் மறையப் போகிறேன். நீ பசுவாக மாறி, இந்த ஜோதி இருக்கும் இடத்தை கண்டுபிடித்து, என்னுடன் வந்து சேர்வாயாக” என்று கட்டளையிட்டு மறைந்து விட்டார்.
சிவனை கண்டறிய பார்வதி ,அவரது ஆணைப்படி, பசு உருவம் கொண்டு, தன் சகோதரனான திருமாலுடன் சிவஜோதியைத் தேடி, பூமியெங்கும் வலம் வந்தாள்.அவளது பரிதவிப்பைக் கண்ட சிவபெருமான், பார்வதி மீது கிருபை கொண்டு, ஒர் அஸ்த நட்சத்திர நாளில் அஸ்தாவர்ண ஜோதியாய் தோன்றினார்.,
அதனைக் கண்டு மனம் மகிழ்ந்த பார்வதி, அந்த ஜோதியுடன் ஐக்கியமானாள். இந்த நிகழ்வால்தான் இவ்வாலயம் உருவானதாக தலவரலாறு கூறுகிறது. பார்வதிக்குக் கிருபை செய்த சிவனுக்கு ‘கிருபா கூபாரேஸ்வரர்’ என்று பெயர் சூட்டப்பட்டது. அம்பாளுக்கு அன்னபூரணி என நாமம்.
இதையும் படிங்க : காதல் திருமணம் நடக்க செல்ல வேண்டிய குத்தாலம் உத்தவேதீசுவரர் திருக்கோயில்!!
பிரகாரத்தில் செல்வ விநாயகர், தெட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், சீதா பிராட்டியுடன் இராமர், பிரம்மா,வள்ளி,தெய்வானையுடன் முருகன் சண்டிகேஸ்வரர் ஆகியோர் அருளுகின்றனர்.
இத்தலத்தின் சிறப்புகள் குறித்து விவரிக்கிறார் விக்னேஷ் குருக்கள் “கிருபா கூபாரேஸ்வரர் எத்தகைய தவறுக்கும் மன்னிப்பு தரக்கூடியவர். சித்தர்களும், முனிவர்களும், மகான்களும், அஸ்த நட்சத்திர நாளில் அரூப வடிவில் இத்தல இறைவனை கைகூப்பி வணங்கி வருவதாக ஐதிகம்.அஸ்த நட்சத்திர நாளில் பிறந்தவர்கள், கொழுக்கட்டை, வடை, லட்டு, நிவேதனம் செய்து அன்னபூரணியை வழிபட்டால், வாழ்வில் இன்னல் நீங்கி இனிய வாழ்வைப் பெறலாம்.
மயக்கமா….தயக்கமா…மனதிலே குழப்பமா… என்ற கலக்கத்தில் இருப்பவர்கள் தெளிவடையலாம். தீராத பிரச்னைகள் எதுவாயினும் அவைகள் தீருவதற்கு திங்கள் அல்லது புதன்கிழமைகளில் இங்கு வந்து வழிபாடு செய்ய சூரிய ஒளி பட்ட பனிதுளிபோல துன்பம் விலகக் காணலாம்.
திருமண தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுவர்கள் பசு கன்று தானம் செய்யலாம் . வேண்டுவோர் வேண்டுவன அருளும் இத்தலத்து இறைவனை வணங்கினால், வாழ்வில் எல்லா நலன்களும் பெற்று பெரு வாழ்வு வாழவர் என்பது நிச்சயம் ” என்றார்.