“திருமணத்த ஆயிரங்காலத்துப் பயிரென’ முன்னோர்கள் சொன்னாங்க.அதில் கலந்திருந்த தமிழ் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் மதிச்சு நடந்தாங்க.
ஆனா…இப்போதெல்லாம் காலையில் மேரேஜ்… மாலையில் டைவர்ஸ்னு… தம்பதிகள் சிலர் பிரிவதை பாக்குறபோது ரொம்ப வேதனையா இருக்கு.
இருமனங்கள் ஒன்று சேர்ந்த திருமணப் பந்தங்கள், விவாகரத்து வழக்குகளா, கோர்ட்டுல
குவிஞ்சு கெடக்கு.
சில பிரிவுகள பெத்தவங்களாலகூட ஏத்துக்க முடியல. அத மத்தவங்க சொல்லியும் தடுக்கவும் முடியல
ஏதோ ஒரு பிரச்னையால பிரிந்த தம்பதிகள், மீண்டும் சேர்ந்து சந்தோசமா வாழலாமே என்று ஏங்குற மனசுகள் அதிகமா இருக்கு.அதுக்கு தெய்வங்களின் துணையும் இருக்கு.
உலக உயிர்களையே பாதுகாக்குற பார்வதி – பரமேஸ்வரன் தம்பதியே, சின்ன விளையாட்டு பிரச்னையில பிரிஞ்சிட்டாங்க. அவுங்கள சேத்து வச்ச அற்புதத் தலம், மயிலாடுதுறை அருகே திருவாவடுதுறையில் அமைஞ்சிருக்கு.ஈசனையும், அம்பாளையுமே இணைச்சு வச்ச தலம் இது என்பதால் சாதாரண மனித தம்பதியரையும் பிணைச்சு வைக்கும்னுநம்புறாங்க. இறையருளால் பிரெஞ்சு தம்பதிங்க சீக்கிரமே சேர்ந்து வாழுறாங்க.
இத்தகைய சிறப்பு வாய்ந்த, ஸ்ரீ ஒப்பிலாமுலையம்மை சமேத ஸ்ரீ கோமுக்தீஸ்வரர் ஆலயத்தைத் தரிசிக்கலாம் வாருங்கள் ….
முதலில் இத்தலத்திற்கு பெருமை சேர்த்த பல்வேறு நிகழ்வுகளில் சிலவற்றை அறிந்துக்கொள்வோம்.
கோ“வாகிய பசுவிற்கு விமோசனம் தந்தவர் என்பதால், இக்கோயில் மூலவர் “கோமுக்தீஸ்வரர்” என்று பெயர் பெற்றார். இத்தலவிநாயகர் துணைவந்த கணபதி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். பிரகாரத்தில் இலிங்கத்தின்மீது, பசு பால் சொரியும் சிலை இருக்கிறது. இதனை “கோரூபாம்பிகை” என்கின்றனர். இத்தலத்தில் ஒரே இடத்திலுள்ள மூன்று சூரியன்களை தரிசிப்பது ரொம்ப விசேஷம்.
“தேவர்கள் இத்தலத்தில் படர் அரசமரமாக விளங்குவதாகவும், அதன்கீழ் இறைவன் திருநடனம் புரிந்ததாகவும் புராண வரலாறு கூறுகிறது. தலவிருட்சமாகத் திகழும் இதனை வலம் வந்து வணங்கினால், வேண்டுவன பெறலாம்” என்கிறார்கள்.
“புத்திரப் பாக்கியம் இல்லாமல் தவித்த முசுகுந்த சக்கரவர்த்தி இந்திரனிடம் பெற்ற தியாகேசரைத் தொடர்ந்து வழிபட்டு வந்தான். ஒருநாள் சிவன், அவனது கனவில் தோன்றி, ‘திருவாவடுதுறை தலத்தில் தன்னை வழிபட குழந்தைபாக்கியம் கிடைக்கப்பெறும்’ என்றார். அதன்படி இங்கு மன்னன் வரவே,அவனுக்கு இத்தலத்தைத் திருவாரூராகவும்,தம்மைத் தியாகேசராகவும் காட்டியருள,மன்னன் வழிபட்டு புத்திரப்பேறு பெற்றான். எனவே, புத்திரப்பேறு இல்லாதவர்கள் இத்தலத்தில் பிரார்த்தித்து பலனடைவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
திருஞானசம்பந்தரின் தந்தையார் சீர்காழியில் யாகம் நடத்த பொன்னும், பொருளும் வேண்டுமென சம்பந்தரிடம் கேட்டார்.ஈசனிடம் யாகத்திற்கு பொருள் வேண்டி, சம்மந்தர் இத்தலத்தில் பதிகம் பாடினார். சிவன் பூதகணங்கள் மூலம் 1,000 பொற்காசுகளை பலிபீடத்தில் வைத்து கொடுத்தருளினார். எனவே இப்பலிபீடம் அருகே நின்று ,சிவனிடம் வேண்டிக் கொண்டால் குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும் என்பது நம்பிக்கை.
சிவத்தொண்டு செய்து வந்த போகரின் சீடரான திருமாளிகைத்தேவர் மீது வீண்பழி சுமத்தப்பட்டதால், மன்னன் படை வீரர்களை அனுப்பி அவரைத் தாக்க முயன்றான். அப்போது, அம்பாள் திருமாளிகைத்தேவரை காக்கும்படி சிவனிடம் வேண்டவே, அவர் நந்தி படையை அனுப்பி, மன்னன் படை வீர்ர்களை விரட்டியடித்தார். அந்த நந்திகள் ஒன்றாக சேர்ந்து இத்தலத்தில் பிரம்மாண்டமான நந்தியாக உருவெடுத்தது. இந்த நந்தி, பீடம் சேர்க்காமல், 14 அடி, 3 அங்குலத்துடன் உயரமாக இருக்கிறது.தஞ்சை பெரியக்கோயிலில் ஒரே கல்லாலான நந்தியைவிடப் பெரியது.பிரதோஷநாளில்இங்கு நடைபெறும் மகாஅபிஷேகம் இத்தலத்து தனிச்சிறப்புகளில் ஒன்று.
‘அட்டமா சித்திகள்’ பெற்ற சிவயோகி ஒருவர் ,கயிலாயித்திலிருந்நு இத்தலம் நோக்கி வந்தபோது, ‘மூலன்’ எனும் இடையன் இறந்து கிடக்க, அவனைச் சுற்றிலும் பசுக்கள் அழுது கொண்டிருந்ததைக் கண்டார்.பசுக்களின் மீது பரிவு காட்டிய அவர், தன் உயிரை மூலன் உடலில் புகுத்தி எழுந்தார். பின் பசுக்களை வீட்டில் விட்டுவிட்டு, இத்தலத்தில் தவத்தில் தவம் செய்ய துவங்கினார். மூலன் வீட்டிற்கு திரும்பாததால், அவனது மனைவி இங்கு வந்து மூலன் உருவில் இருந்த சிவயோகியைத் தன்னுடன் வரும்படி அழைத்தாள். அவர் செல்ல மறுத்தார்.
மூலன் சிவஞானம் பெற்றதாக உறவினர்கள் கூறவே, மனைவியும் விட்டுச் சென்றுவிட்டாள்.அந்த மூலனே “திருமூலர்” என்று பெயர் பெற்றார். இவர் ஆண்டுக்கு ஒரு பாடல் வீதம், 3,000 ஆண்டுகள் வாழ்ந்து 3,000 பாடல்களைப் பாடியுள்ளார். இவையே திருமூலர் திருமந்திரமாகத் தொகுக்கப்பட்டுள்ளது இவர் இத்தலத்தில் ஜீவசமாதி அடைந்துள்ள இடத்தில், அழகிய சிறு
தனிக்கோயிலும், தியான மண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு வரும் பக்தர்கள் தியானமும், யோகமும் செய்து மனஅமைதி பெற்று வருகின்றனர் என்பது நடைமுறை உண்மையாகும்.
இப்போ தம்பதியர் விஷயத்துக்கு வந்திடுவோம்.
“ஒருசமயம் கைலாயத்தில் சிவனும், பார்வதியும் சொக்கட்டான் விளையாட்டில் கோபம் ஏற்பட்டு,சிவன் பார்வதியை பசுவாக பிறக்கும்படி சபித்து விட்டார்.தேவியானவள் பெருமானிடம் பணிந்து,இதற்கு மாற்றாக சாப விமோசனம் கேட்டருளினாள்.
பெருமானும், ‘திருவாவடுதுறை தலத்திற்குச் சென்று வழிபட உன் பசுவுரு நீங்கும்” என்றருளினார். அதன்படி அம்பாள் பசுவின் வடிவில் இங்கு வந்து, தவமிருந்து வேண்ட,சிவன் அவளுக்குக் காட்சி தந்து, தன்னுடன் அணைத்துக்கொண்டு, விமோசனம் கொடுத்தார். பிரகாரத்தில் தெற்கு நோக்கிய சந்நதியில், அணைத்திருந்த நாயகர் உற்சவராக இருக்கிறார். இவர் அணைத்த கோலத்தில் இருந்தாலும், அம்பாள் மீது கைகள் படாதவாறு சிலை அமைக்கப்பட்டிருப்பது சிறப்பம்சம்.ஸ்ரீ அணைத்தெழுந்த நாயகர் இங்கு வரப்பிரசாதியாக திகழ்கிறார். பிரிந்திருக்கும் தம்பதியர் இவரிடம் வேண்டிக்கொண்டால் மீண்டும் இணைவர் என்பது உறுதி ” என்கிறார் உமாபதி சிவாசாரியார்.
தம்பதியர் யாரும் ஒருவரையொருவர் பிரியக்கூடாது. அப்படி பிரிந்தவர்கள் இருந்து உங்களுக்கு தெரியவந்தால், அவர்களுக்கு இத்தலத்தை வழிகாட்டலாம்.
மீண்டும் சந்திப்போம் நேயர்களே.. அதுவரையில் உங்களிடமிருந்து விடைபெறுவது ஐ தமிழ்!