Site icon ITamilTv

“மத்திய அரசின் உதவியின்றி.. தமிழக அரசே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்” – டிடிவி தினகரன்!!

Spread the love

மத்திய அரசின் உதவியின்றி மாநில அரசுகளே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தலாம் என்பதற்கு பிஹார், ஆந்திரா போன்ற மாநிலங்கள் உதாரணமாக இருக்கும்போது, திமுக அரசு சமூக நீதிக்கான அரசு என தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் அனைத்திலும் தவறாமல் பேசும் முதல்வர், தமிழகத்தில் சமூக நீதியை நிலைநாட்டும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த தயங்குவது ஏன்? என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது..

“சென்னையில் நடைபெற்ற முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் திருவுருவ சிலை திறப்பு விழாவில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் மத்திய அரசு நடத்த வேண்டும் என கோரியிருக்கிறார். சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக பிரதமருக்கு அவர் எழுதிய கடிதத்திற்கு இதுவரை பதில் கிடைக்காத நிலையில், தன்னை நோக்கி வரும் கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் மத்திய அரசின் பக்கம் முதல்வர் திருப்பி விட முயல்கிறாரோரா என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

மத்திய அரசின் உதவியின்றி மாநில அரசுகளே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தலாம் என்பதற்கு பிஹார், ஆந்திரா போன்ற மாநிலங்கள் உதாரணமாக இருக்கும்போது, திமுக அரசு சமூக நீதிக்கான அரசு என தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் அனைத்திலும் தவறாமல் பேசும் முதல்வர், தமிழகத்துல் சமூக நீதியை நிலைநாட்டும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த தயங்குவது ஏன்? சமூக ரீதியாக பின் தங்கிய நிலையில் உள்ள மக்களை முன்னேற்றுவதற்கான சமூக நீதி நடவடிக்கையின் முதல் படிதான் இடஒதுக்கீடு. அவ்வாறு வழங்கப்படும் இடஒதுக்கீட்டின் அளவு அனைவருக்கும் பயனளிக்க வேண்டும் என்பதால் சாதிவாரி கணக்கெடுப்பு அவசியமாகிறது.

மக்களின் கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதாரம் மற்றும் வாழ்வாதார விவரங்களை திரட்டி அவர்களுக்கு ஏற்ற வகையில் திட்டங்களை தீட்டி செயல்படுத்துவதுதான் சாதிவாரி கணக்கெடுப்பின் முழு நோக்கமாக பார்க்கப்படுகிறது. நாட்டிலேயே முதல் முறையாக சாதிவாரி கணக்கெடுப்பை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கும் பிஹார் மாநில அரசு, அம்மாநிலத்தில் ஏற்கெனவே அமலில் இருக்கும் 50 சதவிகித இட ஒதுக்கீட்டை 65 சதவிகிதமாக உயர்த்தி அதற்கான சட்டத்தையும் இயற்றியுள்ளது. இந்த சட்டத்தின் மூலம் பிஹாரில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீடு 30 சதவிகிதத்திலிருந்து 43 சதவிகிதமாகவும், பட்டியலின மக்களுக்கான இடஒதுக்கீடு 13 சதவிகிதத்திலிருந்து 20 சதவிகிதமாகவும் உயர்ந்திருக்கிறது.

பிஹாரில் நடைபெற்ற சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதால் சட்ட ரீதியாக எவ்வித தடைகளும் இல்லை என்பதும் தெளிவாகிறது. பிஹாரை தொடர்ந்து அந்திர மாநிலத்தில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முடிவு செய்து அதற்கான பணிகள் டிசம்பர் 9-ம் தேதி தொடங்கும் என அறிவித்திருக்கிறது. கர்நாடகா, ஒடிஷா மாநிலங்களும் சாதிவாரி கணக்கெடுப்புக்கான பூர்வாங்க பணிகளை தொடங்கியிருக்கும் நிலையில் தெலுங்கானா, ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களும் தன்னிச்சையாகவே சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடு சுதந்திரமடைந்த பிறகும் கல்வி, வேலை வாய்ப்பு, அரசியல் பிரதிநிதித்துவம் ஆகியவற்றில் உரிய இடங்களை பெற முடியவில்லை என்ற ஏக்கம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் இன்றளவும் இருந்து வருகிறது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை உறுதி செய்வது மட்டுமின்றி தமிழகத்துல் அமலில் இருக்கும் 69 சதவிகித இடஒதுக்கீட்டை பாதுகாப்பதற்காகவும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டியது கட்டாயமாகிறது.

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியல், பழங்குடியின மக்கள் வளர்ச்சிக்கும், அவர்களின் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கும் அவசியமான சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான ஆணையை பிறப்பித்து, போதுமான நிதியை ஒதுக்கி, அதற்கான பணிகளை தொடங்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.


Spread the love
Exit mobile version