Sundareshapuram Shiva Temple: ஐ தமிழ் நேயர்களுக்கு வணக்கம்.
சித்தரும் பாண்டியரும் வழிபட்ட சுந்தரேசபுரம்..
நாம் இப்போது தென்றல் தவழும் தென்பொதிகை மலைச்சாரலில் இயற்கை எழில் சூழ்ந்த தென்காசிக்கு அருகே உள்ள கடையநல்லூர் அருகே சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சுந்தரேசபுரம் என்னும் அழகிய சிற்றூருக்கு செல்வோம் வாருங்கள்.
இங்குள்ள அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் எனும் திருநாமம் கொண்டு விளங்கும் ஈசனின் சிற்பக்கலை வேலைப்பாடுகள் நிறைந்த சிவாலயத்தை (Sundareshapuram Shiva Temple) நாம் காண இருக்கிறோம். நாம் ஆலயத்தை தரிசிக்கும் முன்பு சற்று பின்னோக்கி சென்று ஆலய வரலாற்றை அறிந்து கொள்வோம்.
“சோனாடு கொண்டான்” என்று மெய்கீர்த்தி மூலம் புகழ்மிக்க மன்னனாக அறியப்படும் முதலாம் மாறவர்ம சுந்தர பாண்டியனின் ஆட்சி காலமான 1216ஆம் ஆண்டுகளில் தொடங்கி சுமார் 30 ஆண்டுகள் ஆட்சி செய்த பொழுது இக்கோவில் நிர்மாணிக்கப்பட்டதாக அறிய முடிகிறது.
அங்குள்ள கற்களின் வயதை கணக்கிட்டால் தொல்லியல் அறிஞர்கள் அதற்கு முந்தைய காலமாக கணிக்கின்றனர். பாண்டிய மன்னனால் எழுப்பப்பட்டதால் மீனாட்சி சுந்தரேஸ்வரர் எனும் திருநாமம் கொண்டு அருள் புரியும் ஈசனின் பெயரால் அவ்வூருக்கு சுந்தரேசபுரம் என்ற பெயரும் நிலை கொண்டு காரணப்பெயராக அமைந்தது.
பிற்கால பாண்டியர்கள் காலத்தில் சூடாமணி பாண்டியன் என அறியப்படும் செண்பக பாண்டியன் காலத்தில் தான் அவரால் வணங்கப்பட்ட தெய்வமான அம்மனுக்கு செண்பகவல்லி அம்மன், செண்பகாதேவி அருவி, செண்பகராஜன் அணைக்கட்டு போன்ற பெயர் காரணங்கள் மூலம் அழைக்கப்பட்டு வந்தது.
தமிழ் மொழிக்கும், சிவாலயங்களை புதியதாக எழுப்பியும், பழங்கோவில்களை புனர் நிர்மாணம் செய்தும் மிகவும் அளப்பரிய சேவைகளை பாண்டிய மன்னர்கள் நாட்டிற்கு அளித்துள்ளனர் என்றால் அது மிகையாகாது. ஆனால் அதே சமயம் அவர்களின் காலத்திற்கு பிறகு சிறிது சிறிதாக சிதிலமடைந்த கிராம கோவில்களில் நாம் காணவிருக்கும் சுந்தரேசபுரம் கற்கோவிலும் ஒன்றாகும்.
பராமரிப்பு ஏதும் இன்றி மிகவும் சிதிலமடைந்த நிலையில் 1960 ஆம் ஆண்டு வரை புதர்கள் மண்டி கிடந்த இடமாக இருந்த இவ்வாலயத்தை உள்ளுரை சேர்ந்த சிவத்தொண்டர் திரு கணபதி சுப்ரமணியம் என்பவர் பல சிவ பக்தர்கள் உதவியுடன் கைகோர்த்து நாம் தரிசிக்கும் அளவிற்கு கோவிலை புனர் நிர்மாணம் செய்து, நித்ய வழிபாட்டிற்கும் உண்டான அனைத்து காரியங்களையும் முன்னின்று செய்து இந்த கலை பொக்கிஷத்தை நமக்கு வழங்கியுள்ளார்.
கோவிலின் உள்ளே செல்வோம் வாருங்கள்..
பதஞ்சலி முனிவரால் சுமார் 200க்கும் மேற்பட்ட துறவிகளுக்கு வாசியோக பயிற்சி அளிக்கப்பட்டு ஜீவன் நிலை கொண்ட இடமாகவும் இக்கோவில் அறியப்படுகிறது. எடுத்துக்காட்டாக இங்குள்ள சிற்பங்களில் பதஞ்சலி முனிவர், கோரக்கர், குதம்பை சித்தர், புண்ணாக்கீசர், கொங்கனார், காகபுஜண்டர் மற்றும் கண்ணப்ப நாயனார் ஆகிய சித்த புருஷர்களின் சிற்பங்கள் காணப்படுகிறது. மற்ற எந்த ஒரு சிவாலயத்திலும் இதுபோன்ற சிற்பங்கள் காணப்படுவது கிடையாது. சிவபெருமான் வேடனாக வந்து அர்ஜுனனுக்கு அருள் செய்த நிகழ்வும் சிற்பமாக இங்கு உள்ளது.
மேலும் கலைநயம் மிக்க பரத கலை அபிநய முத்திரைகளை தெரிவிக்கும் சிற்பங்களும், ஆண்களின் ஜீவ அணுக்களை பற்றிய சிலாரூபமும், பிரசவ வேதனையில் உள்ள பெண்ணிற்கு உதவியாக உடன் இரு பெண்களும் இருந்து பிரசவிக்கும் குழந்தையை வெளியில் எடுக்கும் காட்சிகளும், ஒற்றை காலில் நின்று தவம் புரியும் பெண் சித்தரின் சிற்பங்களும் வேறு எங்கும் காண முடியாத அரும்பெரும் கலை பொக்கிஷமாக நாம் காண்கிறோம். ஆங்காங்கே இவை அனைத்தையும் செய்தது நாங்கள் தான் என்று பாண்டிய குல வம்சத்தின் சின்னமான இரட்டை மீன் சின்னம் பொறிக்கப்பட்டு சொல்லாமல் சொல்கின்றனர் பாண்டிய மன்னர்கள்.
இதையும் படிங்க : 4,448 நோய்களையும் தீர்க்கும் அற்புத திருத்தலம்!!
பல கல்வெட்டுகள் காணப்படாத நிலையிலும், இருப்பதைக் கொண்டு நாம் பல விஷயங்களை அறிய முடிகிறது. சயன கோலத்தில் உள்ள மகாவிஷ்ணு சிற்பம், சைவமும் வைணவமும் ஒருங்கிணைந்து பாண்டியர் காலத்தில் வழிபாட்டில் இருந்ததை காணலாம். மேலும் கோவில் விமானத்தில் இந்திரன் வஜ்ராயுதத்துடன் இருப்பதாக காணப்படும் சிற்பம் பாண்டியர் கால கலை பொக்கிஷ நிர்மாணமாக கருதப்படுகிறது.
அக்கால நாடாண்ட மன்னர்களுக்கு கிடைத்த அரிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டு புனர் நிர்மாணம் செய்யப்பட்ட இக்கோவில் அகத்தியர் முதலான சித்தர்கள் வழிபாட்டில் இருந்துள்ளது. இன்றளவும் வாசியோக பயிற்சியில் ஈடுபடும் ஆன்மீக அன்பர்கள் இக்கோவிலில் வாசியோக தியான பயிற்சியில் ஈடுபட்டால் வாசியோகம் கைகொடும் என்பது நிதர்சன உண்மை.
மேலும் முன்னொரு காலத்தில் சித்தாகம முறைப்படி எழுப்பப்பட்டதாக கருதப்படும் இக்கோவிலில் ஒவ்வொரு சிற்பத்திற்கும் தனிப்பட்ட சக்தி எனப்படும் அதிர்வலைகளை கொண்டதாக அனுபவித்தவர்கள் கூறுகின்றனர்.
உதாரணமாக நிறைமாத கர்ப்பிணியாக உள்ள பெண்கள் கோவிலில் இருக்கும் கர்ப்பிணி பிரசவிக்கும் நிலையில் உள்ள சிற்பத்தை நேரில் கண்ணால் கண்டு தொட்டு வணங்கிய பின் ஈசனை வணங்கி செல்லும் பட்சத்தில் சுகப்பிரசவம் நடந்து தாயும் சேயும் நலமாக உள்ளதாகவும், வாசியோக பயிற்சி சம்பந்தமான சிற்பங்களை தொட்டு வணங்கி பயிற்சியில் ஈடுபடும் நேரத்தில் சுவாச காற்று ஒருநிலைப்பட்டு இறையருள் கிடைப்பதாகவும் மனப்பூர்வமாக உணர்ந்தவர்கள் ஏராளம்.
காரணம் இல்லாமல் காரியம் இல்லை என்ற மூதுரையின் அடிப்படையில் சித்த புருஷர்கள் வடிவமைத்து வழிபட்ட இக்கோவிலை நாமும் வழிபட்டு துன்பங்களில் இருந்து விடுபட்டு அனைத்து வளங்களையும் பெற்று இன்புற்று வாழ ஐ தமிழ் தாய் சார்பாக உங்களையும் காண அழைக்கிறோம் வாருங்கள்.
மீண்டும் ஓர் ஆச்சர்யமான திருத்தல காணொளியுடன் சந்திக்கும் வரை உங்களிடமிருந்து விடைபெறுவது ஐ தமிழ்