தமிழ்நாட்டில் மாநகராட்சி மேயர்கள் இருவர் அடுத்தடுத்து ராஜினாமா (mayors resignation) செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் உற்று நோக்கப்பட்டிருக்கும் நிலையில், அதன் பின்னணி என்ன என்பது பலரது எண்ணமாக இருக்கிறது.
கோவை மாநகராட்சி மேயர் கல்பனா மற்றும் நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் ஆகியோர் நேற்று திடீரென அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர். ஒரே நாளில் இரு மாநகராட்சி திமுக மேயர்கள் ராஜினாமா செய்தது அரசியல் வட்டாரத்தை திரும்பிப்பார்க்க செய்திருக்கிறது. தனிப்பட்ட காரணங்கள், நிர்வாக குறைபாடுகள் என காரணங்கள் சொல்லப்படும் நிலையில், முழுமையான காரணங்கள் குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதில், கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமாரின் ராஜினாமாவை பொறுத்தவரை, உடல்நிலை, குடும்ப சூழல் உள்ளிட்ட தனிப்பட்ட காரணங்களை முன்வைத்து அவர் ராஜினாமா செய்துள்ளதாக ஆணையர் சிவகுரு தெரிவித்துள்ளார்.
ஆனால், கட்சி வட்டாரங்களில் விசாரித்தபோது கிடைத்தத் தகவல்கள் தலைசுற்ற வைத்தன. அதாவது, கல்பனா மேயராக பதவி ஏற்றது முதல் அடுத்தடுத்து பல்வேறு புகார்கள் மற்றும் சர்ச்சைகளில் சிக்கினார். மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் பனிப்போர் நிலவியது. துணை மேயர், மண்டலத் தலைவர்கள், கவுன்சிலர்கள் உட்பட சொந்தக்கட்சிக்காரர்களே அதிருப்தியில் இருந்தனர்.
கல்பனா உள்நோக்கத்துடன் கோப்புகளில் கையெழுத்து போடாமல் இருக்கிறார் என மத்திய மண்டலத் தலைவர் மீனாலோகு மாமன்ற கூட்டத்தில் வெளிப்படையாக புகார் வைத்தார். கான்ட்ராக்டர்களை மிரட்டி கமிஷன் கேட்டது; மேயர் அரசு இல்லத்தில் அமானுஷ்ய சக்தி இருப்பதாக கூறி அங்கு தங்காமல் மணியக்காரம்பாளையம் பகுதியில் வாடகை வீட்டில் இருந்தது; அங்கும் பக்கத்து வீட்டுக்காரர்களை தரக்குறைவாக நடத்தி மிரட்டுவதாக கல்பனா மற்றும் அவர் குடும்பத்தினர் மீது புகார் எழுந்தது; மாந்திரீகம், யாகம் உள்ளிட்டவற்றில் அதிக நாட்டம் கொண்ட அவர் கணவர் ஆனந்தகுமாரின் ஆதிக்கம் அதிகமிருப்பதாக கூறப்பட்டது;
மேலும் கல்பனா செந்தில் பாலாஜி ஆதரவாளர் என்பதால், துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்காமல் கான்ட்ராக்ட் உள்ளிட்ட விசயங்களில் நேருவிடம் மோதல் போக்கில் ஈடுபட்டது என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளும் புகார்களும் எழ, போதாக்குறைக்கு நாடாளுமன்ற தேர்தலில் அவரின் 19வது வார்டில் திமுக-வை விட, பாஜக அதிக வாக்கு வாங்கியதோடு மட்டுமல்லாமல், கோவை புறநகர் பகுதிகளுடன் ஒப்பிடும்போது, மாநகர் முழுவதுமே பாஜக அதிக வாக்குகளை வாங்கியுள்ளது என அவரது செயல்பாடுகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனவே மாநகராட்சி நிர்வாகத்தை வலுப்படுத்தும் விதமாகவும், சட்டமன்ற தேர்தலுக்கு திமுக-வுக்கு களப்பணியாற்றும் விதமாக மேயரை மாற்ற முடிவு செய்ததே அவரது ராஜினாமாவிற்கான பின்னணியாக கூறப்படுகிறது.
மறுபுறம், நெல்லை மாநகராட்சி மேயர் சரவணனின் ராஜினாமாவை பொறுத்தவரை, நிர்வாக ரீதியாக பல்வேறு மோதல்களும், சிக்கல்களும் நெல்லை மாநகராட்சியில் இருந்தது வெளிப்படையாக செய்திகளில் வெளியாகின.
சாலை வசதி, மழைநீர் வடிகால் பணிகள், மின்விளக்குகள் பொருத்துதல் உள்ளிட்ட மக்களின் அடிப்படையான பணிகளை நிறைவேற்றக் கூட முடியாத அளவுக்கு மேயர் மற்றும் கவுன்சிலர்கள் மோதல் நீடித்தது. தங்கள் வார்டுக்கான பணிகளை செய்து கொடுக்காமல் மேயர் தன்னிச்சையாக செயல்படுவதாக கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினார்.
திமுக கவுன்சிலர்களே மேயர் மீது புகார் கொடுப்பது, மாநகராட்சி கூட்டங்களை புறக்கணித்தது; மேயர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது உள்ளிட்ட சம்பவங்கள் அரங்கேறின.
இதனை தொடர்ந்து தான் சரவணனை சென்னை வரவழைத்த கட்சி தலைமை அவரை கடுமையாக கண்டித்ததாக தகவல் வெளியானது. கவுன்சிலர்களுடனான மோதல் காரணமாக மக்களிடம் கட்சிக்கும் ஆட்சிக்கும் கெட்ட பெயர் ஏற்பட்டிருப்பதை உளவுத்துறை அறிக்கைகள் மூலம் அறிந்ததாக தெரிவித்த தலைமைக் கழக நிர்வாகிகள், மேயர் சரவணனை ராஜினானா கடிதம் எழுதிக் கொடுக்குமாறு தெரிவித்ததாகச் சொல்லப்படுகிறது. இதையடுத்தே சரவணன் ராஜினாமா செய்துள்ளார் (mayors resignation).
மேயர்களின் இத்தகைய செயல்பாடுகள் மற்றும் ராஜினாமா காரணமாக தங்களுக்கான அடிப்படை வசதிகள் கிடைக்காமல் பொதுமக்கள் அதிருப்தியிலும் குழப்பத்திலும் உள்ளனர்.